இந்தியாவில் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி ஆர்மபித்து, நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் உலகக்கிண்ண தொடருக்கான இந்தியாவின் அணி இன்று(05.09) இலங்கை, கண்டியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்தியா அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா, தெரிவுக்குழு தலைவர் அஜித் அகர்கார் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
ஆசிய கிண்ண தொடரில் பங்குபற்றிய வீரர்களில் திலக் வர்மா, ப்ரஸீத் கிருஷ்ணா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டு 15 பேரடங்கிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிண்ண தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் உபாதை காரணமாக விளையாடாத லோகேஷ் ராகுல் உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளார். ஆசிய கிண்ண தொடரின் இரண்டாம் சுற்றிலும் அவர் பங்குபற்றுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விபரம்
ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராத் கோலி, லோகேஷ் ராகுல், இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஷர்டூல் தாகூர், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹம்மட் சிராஜ், மொகமட் ஷமி, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர்
இந்தியா அணி பலமான அணியாகவும், உலகக்கிண்ணத்தை வெற்றி பெறும் முதல் வாய்ப்பு உள்ள அணியாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணியுடன் ஒக்டோபர் 8 ஆம் திகதி முதற் போட்டியில் விளையாடவுள்ளது.
10 அணிகள் பங்குபற்றும் இந்த உலகக்கிண்ண தொடரில் ஒவொரு அணியும் மற்றைய அணியிடன் மோதி முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.