கெஹலிய நேர்மையுள்ளவர் என்றால் பதவி விலக வேண்டும்!

நமது நாட்டில் ஜனநாயகம் உயிருடன் இருக்குமானால் நீதி, நியாயம், நேர்மை, உயிருடன் இருக்குமானால் இன்று இங்கே விவாதிக்கப்படும் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. சுகாதார அமைச்சர் எப்போதோ பதவி விலகி வீடு சென்றிருக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று (06.09) கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தான் சுகாதார அமைச்சராக இருக்கும் போது “தரம் குறைந்த மருந்து பாவனையால் மக்கள் உயிரிழக்கின்றனர். பலர் கண்பார்வை இழக்கின்றனர். சிலர் அங்கவீனமடைகின்றனர். உரிய மருந்துகள் இன்றி சத்திரசிகிச்சை ஒத்தி வைக்கப்படுகிறது. ஸ்கேன் இயந்திரங்கள் சேவையில் இல்லை. நோயாளிக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகள் இல்லை.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், இவை அனைத்தும் நாட்டின் பல பாகங்களில் பரவலாக நடக்கின்றன. ஊடகங்களிலிலும் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. இவை அனைத்தையும் காலுக்கு மேல் கால் போட்டு ,தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்த்துவிட்டு ,கொஞ்சம்கூட வெட்கமில்லாமல், கூச்சமில்லாமல் அதே அமைச்சின் அமைச்சராக தொடர்ந்து நீடிப்பதை, பார்க்கும் போது எங்களுக்கே மிகவும் வேதனையாக இருக்கிறது.

இலவச சுகாதார சேவை” என வெறும் பெயர் பலகையை மாத்திரம் மாட்டிக் கொண்டு “மக்கள் மரணிப்பதை வேடிக்கை பார்க்கும்” அரசாங்கத்திற்கு உண்மையில் ஒரு சுகாதார அமைச்சர் தேவையில்லை.

“வயிறு வலி” என வைத்தியசாலை சென்ற இளம் பெண் மருந்து அருந்திய பின் உடல் நீல நிறமாகி உயிரிழந்தார். “கர்ப்பிணி பெண்” ஒருவர் அருந்திய பின் மருந்தின் வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். “கண் சிகிச்சை” செய்து கொண்ட 17 பேர் முழுமையாக கண் பார்வை இழந்தனர். மருந்து ஒவ்வாமை“ காரணமாக அழகிய சிறுமி ஒருவர் உருக்குலைந்த நிலையில் உள்ளார்.

இவை அனைத்தையும் ஊடகங்களில் பார்க்கும் நாட்டு மக்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு செல்வதை “மரண படுக்கைக்கு செல்வது போல” அச்சமுற்று “நாட்டு வைத்திய முறைக்கு” மாறி செல்கின்றனர். அரசாங்கத்தின் சுகாதார சேவைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

அத்துடன், வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை மற்றும் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை சுமார் 800 வைத்தியர்கள் நாட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் 272 பேர் விசேட வைத்திய நிபுணர்கள், 10 இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் 514 ஏனைய வைத்தியர்கள். மேலும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வரும் 822 மருத்துவர்களும் நாடு திரும்ப வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. மேலும் 5000 மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கான இருதய நோய் நிபுணர்கள், மனோவிய வைத்திய நிபுணர்கள், நரம்பியல் வைத்தியர்களுக்கும் பாரிய பற்றாக்குறை நிலவுகிறது. நாடளாவிய ரீதியில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தப்படும் அபாயம் எற்பட்டுள்ளது. தாதியர் சேவையில் 30,000 க்கு அதிகமான வெற்றிடங்கள் நிலவுகிறது.

நாட்டிற்குத் தேவையான 85% மருந்துப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில சுமார் 15 % மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு தேவையான மூலப்பொருட்களும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது
அதற்கேற்ப மருந்துகளின் விலை தற்போது மும்மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் 216 மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுகிறது.

மருந்து தட்டுப்பாடு குறித்து சென்ற வருடம் பெப்ரவரி மாதமே சுகாதார அமைச்சரிடம் தெரியப்படுத்தப்பட்டது அதேபோல கடந்த வருடம் எப்ரல் மாதம் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கோண்டு செல்லப்பட்டது ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத்தால் சுகாதாரதுறை படுவீழ்ச்சி நிலைக்கு சென்றுள்ளது

கராபிட்டிய வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை, அபேஷ்சா வைத்தியசாலையில் ஸ்கேன் இயந்திரங்கள் இயங்கவில்லை என செய்திகள் வருகிறது. இந்த தகவல்கள் நமது நாட்டின் சுகாதார சேவை படுபாதாளத்திற்கு சென்றுகொண்டிருப்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

இந்த நிலைமைக்கு சுகாதார அமைச்சின் நிர்வாக சீர்கேடும்,, முறையற்ற செயற்பாடுகளுமே காரணம். இவற்றுக்கான அனைத்து பொறுப்பையும் சுகாதார அமைச்சரே ஏற்க வேண்டும். அமைச்சர் அனுபவமிக்கவர் என்றால் பிரச்சினைகளை தடுத்திருக்க வேண்டும். திறமை உள்ளவர் என்றால் இப்பிரச்சனையை தீர்த்து இருக்க வேண்டும். நேர்மையுள்ளவர் என்றால் தனது இயலாமையை ஒப்புக் கொண்டு உடனடியாக பதவி விலகி இருக்க வேண்டும்.

இவற்றில் ஒன்றையேனும் செய்ய தவறியதால் தான் இன்று அவருக்கு எதிராக இந்த பாராளுமன்றத்தில் போர்க் கொடி தூக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள சகல வசதிகளும் கொண்ட தேசிய வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை போன்றவற்றிற்கே படுமோசமான நிலை என்றால் வைத்தியரே இல்லாமல் தாதியர்கள் இல்லாமல் இயங்கும் தோட்டப்புற வைத்தியசாலைகளின் நிலைமை எப்படி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தேசிய அளவில் மருத்துவர்கள் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வைத்தியர்களே இல்லாமல் இயங்கும் தோட்ட வைத்தியசாலைகள் குறித்து கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். தோட்ட வைத்தியசாலைகள் ‘தேசிய சுகாதார கட்டமைப்பில்’ சேர்க்கப்பட்டு அனைத்து அரசுடமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது.

உரிமை விடயத்தை எடுத்துக் கொண்டால் சகலவிதமான உரிமைகளுக்காகவும் சுமார் 200 வருடங்கள் கடந்தும் போராடி வரும் பெருந்தோட்ட மலையக மக்களுக்கு சுகாதார உரிமை விடயத்திலும் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று சுகாதார பிரச்சனை தலைதூக்கி இருந்தாலும் மலையகத்தில் அன்று தொட்டு இன்று வரை சுகாதார பிரச்சனை உள்ளது. போதிய அளவு வைத்தியசாலைகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை, தாதியர்கள் இல்லை, கட்டிட வசதிகள் இல்லை.

மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு உள்ளது. நுவரெலியா மாவட்ட நோயாளர்கள் பெரும்பாலும் சிகிச்சைக்கு மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, நாட்டு மக்கள் சிறந்த சுகாதார சேவையை பெற்று உயிருடன் தேக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிப்பர்

நாட்டு மக்கள் மீது அக்கறை இன்றி அவர்களின் உயிர்களை மதிக்காதவர்கள் சுகாதார அமைச்சருக்கு ஆதரவாக வாக்களிப்பர். எனவே, வாக்கெடுப்பின் பின்னர் பலரது முகத்திரை கிழித்தெறியப்படும்.

சபாநாயகர் அவர்களே, நமது நாட்டின் சுகாதார சேவையை மக்களுக்கு சரியாக வழங்க வேண்டுமானால் முதலில் “சுகாதார உரிமை உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமை” என கூறி இந்த பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். சுகாதார சேவை கிடைக்காத ஒருவருக்கு சட்டத்தில் நீதி கிடைத்தால் அமைச்சருக்கும் சரி, அதிகாரிகளுக்கும் சரி, சுகாதார சேவை மேம்பாடு குறித்து கூடிய அக்கறையுடன் செயற்படுவர். எனவே, இவ்வாறான ஒரு சட்டத்தை இயற்ற அரசாங்கம் முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version