சேறு பூசும் அரசியல் தேவையில்லை – சஜித்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இதற்கு காரணமான குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்களா என்ற உண்மையை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று (8.09) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக இரு தரப்பினராகப் பிரிந்து அடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினாலும் 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் 2020 பொதுத் தேர்தலிலும் பிரிவினையாக்கம் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பில் உண்மையைக் கண்டறியவே பொதுஜன பெரமுன மக்கள் ஆணையைக் கோரிய போதும்,அந்த ஆணை வழங்கப்பட்டு வருடங்கள் பல கடந்தும் உரிய நீதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

கத்தோலிக்க சமூகம், கர்தினால்,பாதிரியார்கள் என அனைவரினதும் நம்பிக்கையைப் பெற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தால் இன்று இதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இது போன்ற தாக்குதல்கள் பற்றிய தகவல்களை அறிய வெளிநாட்டவர்களின் அறிவுரை தேவைப்பட்டிருக்காது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாததே தற்போதைய நிலைமைக்கு முக்கிய காரணம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உண்மை எது என்று கண்டறியும் குழுவுக்கும், உண்மையை மறைத்து செயல்படும் குழுவுக்கும் இடையே தான் இன்று பிளவு உருவெடுத்துள்ளதாகவும், இந்நாட்டில் முறையான விசாரணை நடத்தப்படாவிட்டால் சர்வதேச விசாரணை தேவை என்றும், இதற்கு தேசிய ரீதியான குழுவினரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும்,எந்த தரப்பிலும் சந்தேகம் எழாத வகையில் வெளிப்படையான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நேரத்தில் உண்மை தெரிய வேண்டும் என்றும்,சேறு பூசும் அரசியல் தமக்குத் தேவையில்லை என்றும்,ஷானி அபேசேகரவை சிறையில் அடைக்காமல் இந்த விசாரணையை முடியுமானால் அவரிடம் ஒப்படைக்குமாறும், ஜனாதிபதியும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version