உலகக்கிண்ண தொடரின் இரண்டாவது பயிற்சிப் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது. இலங்கை அணி வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற பயிற்சிப் போட்டிகளிலேயே இலங்கை அணி தோல்விகளை சந்தித்துள்ளது.
நேற்று(03.10) ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்களினால் இலங்கை அணி தோல்வியடைந்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றது. இதில் குஷல் மென்டிஸ் 87 பந்துகளில் 158 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். சதீர சமரவிக்ரம 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
30 ஓவர்களில் 240 ஓட்டங்களை பெற்ற நிலையில் குஷல் மென்டிஸ் வெளியேறினார். அதன் பின்னர் 16.2 ஓவர்களில் 54 ஓட்டங்கள். 7 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டத்தின் வெளிப்பாடாக இது அமைந்தது.
பதிலுக்கு ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாடிய வேளையில் மழை பெய்தமையினால் 42 ஓவர்களில் 257 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 38.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ரஹ்மனுள்ளா குர்பாஸ் 119 ஓட்டங்களையும், ரஹ்மத் ஷா 93 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் துடுப்பாட்டத்தை நிறுத்தி வெளியேறினார்கள். கஹூன் ரஜித, லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 07 விக்கெட்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 47.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 337 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.