முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் இன்றும் (04.10) பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு, போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாண மருதனார்மடம் சந்தியில் இன்று காலை 9 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பமாகியிருந்தது. நீதி தேவதையின் சிலையை முன்னிறுத்தி அதன் முன் மண்டியிட்டு, நீதியை பெற்று தருமாறு வேண்டியிருந்தனர்.
அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பைக் காட்டுவதன் மூலமே நீதித்துறையின் சுயாதீனத்தையும், நீதிபதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என போராட்டத்தின் மூலம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.