இலங்கை கிரிக்கெட்டின் விசேட விசாரணை அறிக்கை மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் விசேட விசாரணை அறிக்கை மற்றும் விளையாட்டு அமைச்சினால் நடத்தப்பட்ட உள்ளக கணக்காய்வு அறிக்கை என்பன நேற்று (10/03) விசேட புலனாய்வு பிரிவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி குசலா சரோஜனி வீரவர்தன உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினால் முறையாக நடத்தப்பட்டு வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை மற்றும் விசேட கணக்காய்வு அறிக்கையும், 04.04.2023 அன்று இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தொடர்பில் வெளியிடப்பட்ட விசேட விசாரணை அறிக்கை மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக விளையாட்டு அமைச்சின் உள்ளக கணக்காய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையுமே இவ்வாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே. மகேசனினால், விளையாட்டு குற்றங்களுக்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் டிஐஜி டபிள்யூ.ஏ.ஜே.எச். பொன்சேகாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, விளையாட்டு குற்றங்கள் தடுப்புச் சட்டம் 2019 இலக்கம் 24-ன் படி இந்த விசாரணைகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.