பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் விதிகளைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்ற சபையில் கருத்து தெரிவித்ததற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது ஒரு பாரிய பிரச்சினையாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட சிறப்புரிமைச் சட்டத்தை மீறும் நபர்களை ஏன் சிறப்புரிமைக் குழுவிற்கு அழைத்து வருவதில்லை என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், இது பாரதூரமான விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான நீதியமைச்சின் ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் சபையில் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு அரசியலமைப்பு பேரவை எடுக்கும் முடிவுகள் வெளிப்படையாக பேசப்படாவிட்டால் சில தெளிவின்மைகள் நிலவும் என்றபடியால் இது தொடர்பாக விளக்கமளிப்பது சிறந்தது என்றும், பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் நடவடிக்கையின் போது அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் பெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தாலும், அரசியலமைப்பு பேரவையின் 5 இல் 3 தீர்மானத்தில் ஒப்புதல் நடந்ததாகவும், தாமும், கௌரவ கபீர் ஹாசிம் மற்றும் மற்றுமொருவரும் இதற்கு எதிராக தமது கருத்தைத் தெரிவித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.