ஷார்ஜாவில் நூல் வெளியீட்டு விழா!

ஷார்ஜாவில் உள்ள ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் உடன்குடி கவின்முகில் மு. முகமது யூசுப் எழுதிய சீறாப்புராணத்தில் ஒளிரும் உவமையும் உண்மையும் – ஓர் அறிவியல் ஆய்வு என்ற நூலின் பாகம் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த (10.12) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விழாவுக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் கம்பம் பீ.மு. மன்சூர் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் நூலாசிரியர் தமிழ்ப் பணியில் இல்லாவிட்டாலும் சீறாபுராணத்தின் 20 பாடல்களை ஆய்வு செய்து இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளார். மருந்தாளுநர் படிப்பை படித்து இந்த ஆய்வில் சிறப்பான முறையில் ஈடுபட்டிருப்பது வியப்பளிக்கிறது. இன்னும் இந்த ஆய்வினை தொடர வேண்டும் என்றார்.

மாணவர்கள் ஹம்தான் மற்றும் அத்னான் ஆகியோர் இறைவசனங்களை ஓதினர்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் அமீரக அமைப்பாளர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃஹ்ஃரூப் முன்னிலை வகித்தார். அவர் தனது உரையில் தனது பள்ளிக்கூட காலத்தில் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் வேடத்தில் நடித்த தனது அனுபவத்தை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தினார்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் அமீரக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர்

உடன்குடி கவின்முகில் மு. முகமது யூசுப் எழுதிய சீறாப்புராணத்தில் ஒளிரும் உவமையும் உண்மையும் – ஓர் அறிவியல் ஆய்வு என்ற நூலின் பாகம் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நூல்களை வெளியிட முதல் பிரதிகளை முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃஹ்ஃரூப் பெற்றுக் கொண்டார். மேலும் நூலாசிரியருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தர்.

அப்போது விழாப் பேருரை நிகழ்த்திய பொதுச் செயலாளர் தனது உரையில் :

உடன்குடி கவிமுகில் மு. முகமது யூசுப் சீறாப்புராணம் குறித்து ஆய்வு செய்த நூல்கள் முஸ்லிம் லீக் மாநாட்டில் வெளியிட்டிருப்பதை நினைவு கூர்ந்தார். மேலும் நூலாசிரியர் மேற்கொண்டு வரும் ஆய்வுகள் தமிழ் கூறும் நல்லுலகில் சீறப்புராணத்தை கொண்டு செல்ல மிகவும் உதவியாக இருக்கும். இத்தகைய முயற்சிக்கு நமது அனைவரின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.

மேலும் அவரது நூலின் இரண்டாம் பாகத்துக்கு நான் அணிந்துரை வழங்கியுள்ளேன். சீறாப்புராணத்தை எழுதிய உமறுப்புலவரின் பிறந்த நாளை அரசு விழாவாக நான் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளை சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தேன். இந்த வேண்டுகோளை ஏற்ற தமிழக அரசு அதற்கு உடனடியாக அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

வள்ளல் சீதக்காதியின் ஆதரவு உமறுப்புலவருக்கு இருந்தது. இதனால் சீறாப்புராணம் வெளிவர உதவியாக இருந்தது.

இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழ் மொழியில் அதிகம் இருந்து வருகின்றன. அதனை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய வேண்டும். நாம் அனைவரும் தமிழர்கள். வாணிகத்துக்கு வந்த அரபு நாட்டவரின் காரணமாக நாம் இஸ்லாமை ஏற்றுக் கொண்டோம். நாம் அன்னிய நாட்டில் இருந்து வந்தவர்கள் இல்லை.

நமது வரலாற்றை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் காயல்பட்டிணத்தில் வரலாற்று ஆய்வு மையம் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் மண்ணின் மைந்தர்கள் என்பதை வெளிப்படுத்த இது போன்ற ஆய்வுகள் உதவும்.

இப்படி இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழுக்கு மேற்கொண்ட பங்களிப்பை பல்வேறு எடுத்துக்காட்டுகள் விவரிக்க முடியும்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பான பங்கினை வகித்து வருகிறது. அதன் நிறுவனர் ஜமால் முஹம்மது ராவுத்தர், காந்தியடிகளை சந்தித்து விடுதலை போராட்டுத்துக்காக ‘பிளாங்க் செக்கை’ வழங்கினார். இத்தகைய நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் அமீரகத்தில் மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டுக்குரியது.

இந்த நிகழ்வில் கல்வியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை துபாய் வந்த நான் முதன் முதலாக இந்த நிகழ்வில் பங்கேற்பது மிகவும் சிறப்பானதாக கருதுகிறேன் என்றார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், நிர்வாகக்குழு உறுப்பினர் நவாசுதீன், துபாய், சகினா ஈவெண்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் கவிஞர் நூர் ஃபாத்திமா, அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் நிர்வாகி கால்டுவெல், ஷார்ஜா தி எமிரேட்ஸ் நேஷனல் பள்ளிக்கூடத்தின் நான்காம் வகுப்பு மாணவர் மாஸ்டர் முகுந்தன் மன்னர் மன்னன், குமரி மாவட்டம் மணலிக்கரை அப்துல் அலீம் உள்ளிட்டோர் நூல் ஆய்வுரை நிகழ்த்தினர்.

அமீரக காயிதேமில்லத் பேரவை துணைப் பொதுச் செயலாளர் இராமநாதபுரம் பரக்கத் அலி, துபாய் மண்டல செயலாளர் கீழக்கரை காமில், அபுதாபி அய்மான் சங்க துணை தலைவர் ஆவை அன்சாரி, பேராசிரியர் கலந்தர், ஐடிஎம். சர்வதேச பல்கலைக்கழக்த்தின் பேராசிரியர் முஹிப்புல்லா, சொறிப்பாரைப்பட்டி ஜாஹிர் ஹுசைன், மணமேல்குடி அம்ஜத் கான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

உடன்குடி கவின்முகில் மு. முகமது யூசுப் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஷார்ஜா நகரில் வளைகுடாவில் முதன் முதலில் எனது நூல்கள் வெளியிடப்படுவது மிகவும் நினைவு கூறத்தக்க வகையில் அமைந்துள்ளது.

இந்த விழாவில் பொதுச் செயலாளர் முஹம்மது அபுபக்கர் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்று சிறப்பு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதில் பேசிய ஆய்வாளர்கள் மிகவும் சிறப்பாக படித்து தங்களது கருத்துக்களை வழங்கியிருப்பது எனக்கு மேலும் எழுத உற்சாகத்தை தந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள அமைப்பினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

முன்னாள் மாணவர் நிர்வாகக்குழு உறுப்பினர் கட்டுமாவடி பைசல் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த விழாவில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் மக்கி ஃபைசல், முகைதீன், சொக்கம்பட்டி கபீர், காயல் அப்துல் லத்தீப், மதுக்கூர் அமீன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

ஷார்ஜாவில் நூல் வெளியீட்டு விழா!
ஷார்ஜாவில் நூல் வெளியீட்டு விழா!

Social Share

Leave a Reply