அதிகரித்த மழை வீழ்ச்சி காரணமாக 50 இற்கும் மேற்பட்ட பிரதான நீர்த்தேக்கங்கள் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சுதர்ஷனி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மல்வத்து ஓயாவை பயன்படுத்தும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நில்வலா கங்கையின் தாழ்நிலப் பகுதிகளிலும் தொடர்ந்தும் வெள்ள அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.