இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இரு தரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் முன்மொழியப்பட்ட கூட்டு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான் வழிமுறைகளை ஆய்வு செய்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம், திருகோணமலை எண்ணெய் சேமிப்பு தாங்கிகள், துறைமுகங்கள், ரயில்கள் மற்றும் ஏனைய துறைகளில் கூட்டுத் திட்டங்கள் உட்பட எரிசக்தித் துறையில் அதிக இந்திய முதலீடுகளின் சாத்தியம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்வதற்கு கடன் மறுசீரமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், நிவாரணப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை வழங்குதல் மற்றும் பணப்புழக்க பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதியைப் பெறுவதற்கு வழங்கப்பட்ட ஆதரவுக்காக இந்தியாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை இலங்கையில் சேவை புரிந்த புதிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது பதவிக் காலத்தை இதன்போது நினைவு கூர்ந்தார்.
இருதரப்பு நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்காக மீண்டும் ஒருமுறை கொழும்பில் பணியாற்றுவது பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டாண்மை தொலைநோக்குப் பார்வை மற்றும் இரு நாட்டு தலைவர்கள் ஒப்புக்கொண்ட 14 அம்ச வேலைத்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“இலங்கைத் தலைமையின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கையின் நலனுக்காக, இலங்கை மக்களுடன் இணைந்து பணியாற்றுவதே தனது நோக்கம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.