மட்டக்களப்பில் வெள்ளத்தால் 2319 குடும்பங்கள் பாதிப்பு!

மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை தொடராக பெய்து வருவதனால் கடந்த 48 மணித்தியாலங்களில் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்ததுடன், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கிரான் புலி பாய்ந்தகல் மற்றும் கின்னயடி பிரம்படித்தீவு, ஈரலகுளம், மயிலவட்டுவான், வாகரை கல்லரிப்பு பகுதிகளுக்குச் செல்லும் பாதை முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் படகு சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு வாகரையில் 393 குடும்பங்கள், மண்முனை வடக்கு பகுதியில் 33 குடும்பங்கள், களுவாஞ்சிக்குடி பகுதியில் 7 குடும்பங்கள், மண்முனை தென் தென்மேற்கு பட்டிப்பளை பகுதியில் 10 குடும்பங்கள், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பகுதியில் 290 குடும்பங்கள், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடியில் 1498 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 7 குடும்பங்கள் காத்தாங்குடி பதுரியா வித்தியாலயத்திலும், எறாவூர் பற்று செங்கலடி பகுதியில் 88 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 27 குடும்பங்கள் எறாவூர் – 4 கோயில் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வவுணதீவு மண்முனை மேற்கு பகுதியில் படகில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததுடன், பெரும்பாலான வீதிகளும் வெள்ள நீரால் நிறைந்துள்ளதுடன், பிரதான கால்வாய்கள், ஆறுகள், மற்றும் தாழ்நில பிரதேசங்களில் உள்ள மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version