புரொய்லர் கோழியும் பெரிய பிள்ளையாகுதலும்…

சில நாட்களுக்கு முன் வவுனியாவில் கோழிப் பண்ணையாளர்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பைச் செய்து கொண்டிருந்த போது அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்.” புரொய்லர் கோழி இறைச்சியை சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா?”. பெரும்பாலானவர்கள் சொன்ன பதில் கூடாது என்பதுதான். அதற்குக் காரணமாக அவர்கள் சொன்ன பதில்கள் இவைதான்.

புரொய்லர் கோழியும் பெரிய பிள்ளையாகுதலும்…

” நீரிழிவு , மாரடைப்பு, கொலஸ்ரோல், இரத்தக் கொதிப்பு,புற்றுநோய் போன்ற பல நோய்கள் வரும்.”

” அந்த கோழிகள் மனிதனுக்குத் தீங்கான உணவுகளை உண்டே வளர்கின்றன”

“நாட்டுக் கோழிகள் இயற்கையான உணவுகளை உண்டே வளர்கின்றன.ஆரோக்கியமானவை”

” முன்பு ஆறு மாதங்களில் எடுக்கும் வளர்ச்சியை தற்போதய கோழிகள் 40 -50 நாட்களில் அடைவது அவற்றை உண்ணும் மனிதர்களுக்கு தீங்கானது”

” அவை வேகமாக வளர்வதைப் போல அதை உண்ணும் நாங்களும் விரைவாக வளர்ந்து இறந்து போவம்”

” அவை வேகமாக வளர ஊசி போடுகிறார்கள். அதுவும் ஓமோன் ஊசி”

” அவற்றை உண்பதால் தான் எங்கட பெண் பிள்ளைகள் வேகமாக சாமத்தியப் படுதுகள். இது கூடாதுதானே? “

கடைசியா அவர்கள் கூறிய விடயத்தை மேலும் விளக்கச் சொன்னேன்.(அங்கு கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதுடைய பெண்கள்.)

“முந்தியெல்லாம் எங்கட பெண் பிள்ளைகள் 14-15 வயசிலதான் சாமத்தியப்படுங்கள்.நாங்களெல்லாம் அப்பிடித்தான்.இப்ப 10 வயசிலையும் சாமத்தியப்படுதுகள்.அதுக்கு காரணமே இந்த புரொயிலர் கோழிதான்”

“யார் சொன்னது? “

“டொக்டர்மார்”

“எந்த டொக்டர்மார்?”

“இந்த பேஸ்புக்கிலயும் யூரியூப்பிலயும் வார ஆக்களும் டொக்டர் மாரும்”.

நான் கேட்டேன் ” நீங்கள் கிழமையில் எத்தனை நாள் கோழி இறைச்சி சாப்பிடுவீங்க?”

பலர் ஒருதடவை என்றார்கள்.சிலர் இரண்டு தடவை.சிலர் பத்து நாட்களுக்கு ஒரு தடவை என்றார்கள்.

“உங்கள் பிள்ளைகள் கிழமையில் எத்தனை தடவை இனிப்புகள், சொக்லேட்,கேக்,கோதுமை உணவுகள்,ஐஸ்கிறீம்,சோடா வகை குடிப்பார்கள் “எனக் கேட்டேன்.

“அது கணக்கு வழக்கு இல்லை “என சிரித்தார்கள்.

எத்தனை தடவை பிரைட் ரைஸ்,கொத்து,பீட்சா,பேர்கர் சாப்பிடுவார்கள்.?

“அடிக்கடி அது நடக்கும்.”

“அடிக்கடி எண்ணையில் பொரித்த உணவுகள் சாப்பிடுவார்களா? “

“ஓம் சாப்பிடுவார்கள். “

“விரைவு உணவுக்கடைகளில சாப்பிடுகிறார்களா?”

‘ ஓம்.அடிக்கடி நாங்களும் போவம்.குடும்பத்தோட நேரத்தை போக்க வேறு என்ன வழி?”

“நல்லாச் சீனி போட்டு பால், யூஸ் என குடிப்பார்களா? “

“அது இல்லாம எப்பிடி. ? “

“இதெல்லாம் உங்கட பிள்ளையள்ட வளர்ச்சியை கூட்டும் தெரியாதா? “

முழித்தார்கள்.

“சரி ! அடுத்த விசயத்துக்கு வாறன்.முந்தி நீங்க வீட்டில நல்லா வேலை செய்வீங்க. உரலில அரிசி இடிப்பீங்க.அம்மி ஆட்டுக் கல் பாவிப்பீங்க.கிணற்றில் தண்ணி அள்ளுவீங்க.வீட்ட கூட்டுவீங்க.தேங்காய் உரிப்பீங்க.பல கிலோமீட்டர் நடப்பீங்க.சைக்கிள் ஓடுவீங்க.இப்ப உங்கட பிள்ளையல் இதில ஏதாவது செய்யுதுகளா? இல்லையே.அதுகள ஒரு வேலை செய்ய விடுறீங்களா? கொஞ்சத் தூரம் நடக்குதுகளா? வியர்க்க விறுவிறுக்க விளையாடுதுகளா? சாப்பிடுற சாப்பாட்டுக்கு வேலை செய்தாத்தானே உடம்பு செரிக்கும்.இல்லாட்டி உடம்பில கொழுப்பா படியும் தானே.பிள்ளைகளின் பருமன் பெரிதாகும்.விரைவாக சகலதும் நடக்கும்.சாமத்தியமும் படும். இதில புரொய்லர் கோழியை மட்டும் குறை சொல்லி இலகுவாக தப்புறம். மச்சம் சாப்பிடாத ஐயர் வீட்டு பிள்ளையளும் இப்ப விரைவாக சாமத்தியப் படுதே? அதுகள் எங்க புரொய்லர் சாப்பிட்டது?”

“அத்துடன் , உங்கள் பிள்ளைகள் இரவு பகலாக கைபேசி பாவிப்பதும் கணணி டீவி பார்க்கதும் பிரச்சனைதான். தேவையற்ற அழுத்தத்தை தருவதோடு அவற்றிலிருந்து வரும் ஒளி கண் வழியாக மூளையை சென்றடைந்து பல வளர்ச்சி ஓமோன்களை தூண்டுகின்றன. முன்பெல்லாம் காலை 6 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடையில் தான் வெளிச்சமே. இப்ப அப்படியா. இல்லையே.. மனித மூளை செயற்கை ஒளியை இயற்கை ஒளியாகத்தான் கருதும்.அப்போதும் உடல் வளர்ச்சி நிகழும். இந்த நுட்பத்தை பயன் படுத்தியே கோழிகள் அதிக முட் டையிட செயற்கை ஒளி வழங்குவோம்.

“நீங்கள் சொல்லும் நஞ்சுத் தீவனம் ஓமோன் கதை எல்லாம் கற்பனை. உலகெங்கிலும் தரமான கோழிகள் நீண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை தொடர்ச்சியாக பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுக்கு தரமான தகுந்த ஊட்டச் சத்துகள் சரியாக கணிக்கப்பட்டு வழங்கப் படுகின்றன. நோய் வர முடியாத கட்டுப்பாடான கொட்டகைகளில் வளர்கப்படுகின்றன. பல பண்ணைகளுக்கு வெளியாட்கள் , வேறு விலங்குகள் போகவே முடியாது. ஏன் பூச்சிகள் கூட நுழைய முடியாது. பொருத்தமான வெப்பனிலை, சாரீரப்பதன் என சகலதும் வழங்கப்படுகின்றன. சுத்தமான தண்ணீர் கொடுக்கப்படுகிறது. நோய்த் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதைத்தான் ஓமோன் என தவறாக கருதுகிறீர்கள் போல. மனிதர்களுக்கும் நோய் வராமல் இருக்க பல தடுப்பூசிகள் சிறு வயது முதல் வழங்கப் படுகின்றதைப் போலத்தன் இதுவும். இது புரொயிலருக்கு மட்டுமல்ல நீங்கள் சொல்லும் நாட்டுக் கோழிக்கும் கொடுக்கப் படுகிறது.”

“மேலும் ஓமோன் போன்றவற்றின் விலை அதிகம். அவற்றை வழங்கினால் ஒரு கிலோ கோழியிறைச்சி 20000 வரை போகும்.அவற்றை இலட்சக் கணக்கில் உள்ள கோழிகளுக்கு வழங்குவது சாத்தியற்றது.அதுவும் குறைந்த நேரத்தில்.ஓமோன்கள் அதிக வெப்பத்துக்கு செயலிழக்கும் தன்மையுடையன. பெரும்பாலான ஓமோன்கள் குளிர்ப்பதன நிலையில் பேணப்பட வேண்டியவை.வெளியே எடுத்த ஒரு சில மணி நேரத்தில் குளிர் குறைந்தால் செயலிழந்து போகக் கூடியன.குறித்த ஒரு ஓமோன் போத்தலை உடைத்து ஒவ்வொரு கோழியாக எப்படி உடனடியாக வழங்குவது? மேலும் நன்றாக அதிக வெப்பத்தில் சமைக்கும்போது ஓமோன்கள் செயலிழந்து விடும். “

“மனிதர்களுக்கு இலகுவாக கிடைக்கத்தக்க அவசியமான குறைந்த விலைப் புரதம் இந்த புரொய்லர் கோழியிறைச்சி.அதை பொய்யான தகவல்களைச் சொல்லி தடுப்பது பிழையானது. “

“ஆனால், நுண்ணுயிர் கொல்லி மருந்து அதிகளவில் பாவிக்கப்பட்ட கோழி இறைச்சி கேடானது.மனித சுகாதாரத்தை பாதிக்கக் கூடியது. கண்டபடி தீவனக் கடைகளில் வைத்திய அறிவுறுத்தல் இல்லாது வாங்கிப் பயன்படுத்தும் நுண்ணுயிர் கொல்லிகள் மிக ஆபத்தானவை. அது புரொய்லரோ நாட்டுக் கோழியோ என்று இல்லை.அதை உறுதிப்படுத்துங்கள். நன்றாக வளர்க்கப்பட்ட நன்றாக சமைக்கப்பட்ட புரொய்லர் இறைச்சி பாதுகாப்பானதே” என்று சொல்லி முடித்தேன்.

வைத்தியர் கிருபானந்தன்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version