தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் செவ்வியல் இலக்கிய உரை வளங்கள் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் தலைமையுரை ஆற்றினார். விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கருத்தரங்க நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அவர் உரை நிகழ்த்துகையில் தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டும், எழுதப்பட்டும், இலக்கணம், இலக்கிய வளம் மிகுந்த மொழியாக தமிழ் விளங்குகிறது. ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது. தமிழ் அறிஞர்கள் வ. அய். சுப்பிரமணியன், ச. அகத்தியலிங்கனார், ச. வே. சுப்பிரமணியனார், சோ. ந. கந்தசாமி ஆகியோர் ஒன்று கூடிக் கலந்தாய்ந்து நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் 41 தமிழ் இலக்கியங்களை செவ்வியல் நூல்கள் என வகைப்படுத்தினர். நூறாண்டிற்கு மேலாக நம் அறிஞர்களின் கோரிக்கைகளாலும், பல அமைப்புகளின் போராட்டங்களாலும் பல்கலைக்கழகங்களின் தீர்மானங்களாலும் அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியாலும் 2004 ல் செம்மொழி அந்தஸ்து பெற்றது. இச்சிறப்பு பெறுவதற்கு தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், இரட்டைக்காப்பியம், முத்தொள்ளாயிரம் ஆகிய 41 நூல்களை வைத்தே கிடைக்கப்பெற்றது. அத்தகைய நூல்களின் உரைகள் பற்றி 90 பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கட்டுரை வழங்கிருப்பது மிகவும் பாராட்டிற்குரியது என்று பேசினார். நாகம்பட்டி கல்லூரி தமிழ்த்துறை மாணவர்கள் 92 பேருக்கு தன் சொந்த நிதியில் 37000 ரூபாய்க்கு கருத்தரங்க நூலை பரிசாக வழங்கினார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் இயக்குநர் பேரா. வெளியப்பன் மதிப்புரை வழங்கினார். ஓட்டப்பிடார ஊராட்சி ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அறங்காவலர் சண்முகராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சங்கரன்கோவில் பசும்பொன்முதுராமலிங்கத்தேவர் கல்லூரி பேரா. ஹரிஹரன் மதுரை அமெரிக்கன் கல்லூரி பேரா. பூமிச்செல்வம் ஆகியோர் அமர்வுத்தலைவர்களாக பங்கேற்றனர். சிங்கப்பூர் நன்யாங் தொழி நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சீதாலட்சுமி, துபாய் கர்டின் பல்கலைக்கழகப் பேரா. சித்திரைப் பொன் செல்வன், இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிவகுமார் மற்றும் திரவியநாத திலீபன் சிறப்புரை ஆற்றினார்கள் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் சேதுராமன், பவானி, சித்ரா தேவி, சிவகுமார், சரவணகுமார், டால்பின் ராஜா , சரவண புஸ்பம், உடற்கல்வி இயக்குநர் கணேசன், மற்றும் நிர்வாகவியல் துறை சிவசுப்பிரமணியன், அலுவலகப் பணியாளர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.