குஜராத் அணி வெற்றி..! – 12வது முறையாகவும் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணி தோல்வி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் மோதலில் குஜராத் டைடன்ஸ் அணி 6 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 

குஜராத் டைடன்ஸ் அணியின் முன்னாள் தலைவர் ஹர்திக் பாண்டியா, இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக களமிறங்கியிருந்தமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 5வது போட்டியாக அமைந்திருந்த இந்த போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று(24) நடைபெற்றது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி தலைவர் ஹர்திக் பாண்டியா களத்தடுப்பை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த குஜராத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சாஹா 19 ஓட்டங்களுடனும் கில் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

ஏனைய வீரர்களும் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் 39 பந்துகளில் 45 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலு சேர்தார்.  

ராகுல் டெவாடியா 15 பந்துகளில் 22 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க, குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களுடன் இன்னிங்ஸை நிறைவு செய்தது. 

மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் பும்ரா 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும், சாவ்லா ஒரு விக்கெடினையும் பெற்றுக் கொண்டனர். 

169 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை அணியின், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷன் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். 

ரோஹித் சர்மா மற்றும் ஏனைய மத்திய தரவரிசை துடுப்பாட்ட வீரர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர். ரோஹித் 29 பந்துகளில் 43 ஓட்டங்களையும்,  டெவால்ட் ப்ரீவிஸ் 38 பந்துகளில் 46 ஓட்டங்களையும், திலக் வர்மா 19 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

இறுதி ஓவரின் போது களத்தில் இருந்த அணி தலைவர் ஹர்திக் பாண்டியா, இறுதி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 10 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க, போட்டியில் வெற்றி பெறுவதற்கு 4 பந்துகளில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

அப்போது, உமேஷ் யாதவின் பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்க போட்டி குஜராத் அணியின் வசமானது. 

பந்துவீச்சில் ஓமர்சாய், உமேஷ், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் மோஹித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர் ஒரு விக்கெட்டினையும் பெற்றுக் கொண்டனர். நான்கு ஓவர்கள் பந்துவீசிய ரஷித் கான் 23 ஓட்டங்களை மாத்திரம் வழங்கியிருந்தார். 

போட்டியின் ஆட்ட நாயகனாக குஜராத் அணியின் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டார்.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version