2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக இன்று(07) நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
உபாதையின் காரணமாக ஆரம்ப போட்டிகளில் பங்கு பெறாமல் இருந்த மும்பை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் களமிறங்கியிருந்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோஹித் சர்மா 49 ஓட்டங்களையும், டிம் டேவிட் 45 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 42 ஓட்டங்களையும் மற்றும் அணி தலைவர் ஹட்ரிக் பாண்டியா 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இன்னிங்ஸின் இறுதி ஓவர்களின் போது அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
டெல்லி அணி சார்பில் பந்து வீச்சில் அக்சர் படேல் மற்றும் அன்ரிச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கலீல் அஹமட் ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.
235 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது.
டெல்லி அணி சார்பில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 71 ஓட்டங்களையும், பிரித்வி ஷா 66 ஓட்டங்களையும் மற்றும் அபிஷேக் பூரல் 66 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் 1 விக்கெட்டினையும் கைப்பற்றிக் கொண்டனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை அணியின் ரொமாரியோ ஷெப்பர்ட் தெரிவு செய்யப்பட்டார்.
ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் இறுதி இடத்திலிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் 2 புள்ளிகளுடன் ஊடாக 8ம் இடத்திற்கு முன்னேறியது.
5 போட்டிகளில் பங்குபற்றி ஒரு வெற்றியினை மாத்திரம் பெற்றுக் கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரவரிசை பட்டியலில் 10 இடத்தில் உள்ளது.