IMF உடனான வேலைத்திட்டமே பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தீர்வு – ஜனாதிபதி

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட கட்டமைப்பும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் நேற்று (07) நடைபெற்ற கண்டி சட்டத்தரணிகளுடனான சிநேகபூர்வ சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டமே இலங்கையின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான விரைவான தீர்வாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் பயனை மக்களுக்கு வழங்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், அனைத்து துறைகளிலும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக புதிய சட்டக் கட்டமைப்பு கொண்டுவரப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, அந்த செயற்பாடுகளுக்கு சட்டத்துறையில் உள்ள அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை தொடர வேண்டுமா அல்லது அதை மாற்றியமைப்பதா என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும். சம்மதித்து விட்டு ஒவ்வொரு முறையும் முடிவை மாற்றிக் கொள்ளும் அவப்பெயர் இலங்கைக்கு உண்டு.

இதுவே நாட்டுக்காக எமக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகும். எனவே, இந்த நன்மையை மக்களுக்கு வழங்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக்க எதிர்பார்க்கிறோம். நாட்டின் மீதான பொறுப்பில் இருந்து நாம் யாரும் தப்ப முடியாது. எனவே, அதனால் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும், நாட்டின் தற்போதைய பொருளாதார முறைமையில் சிக்கித் தவிப்பதா அல்லது போட்டிமிக்க ஏற்றுமதி பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதா என்பதை முடிவு செய்து நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்கு தேவையான பௌதீக வளங்களும் மனித வளங்களும் எம்மிடம் உள்ளன. நம் நாட்டின் பல தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தங்கள் தொழிலை நடத்தி வருகின்றனர்.

இன்று உலகின் மிகப் பெரிய பெருந்தோட்ட நிறுவனம் இலங்கை நிறுவனத்திற்கு சொந்தமானது. மேலும், உலகின் மிகப்பெரிய தேயிலைத் தோட்ட நிறுவனம் இலங்கையில் உள்ளது. உலக அளவில் நமது ஆடைத் தொழிலுக்கு உயர்ந்த இடம் உண்டு.
எனவே, முயற்சி செய்தால் உலகை வெல்லலாம்.

எனவே, நாம் கூடிய விரைவில் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு திரும்ப வேண்டும். புதிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமாக உள்ளது.
மேலும், நமது வர்த்தக நடைமுறைகளில் பெரிய மாற்றங்கள் இருக்க வேண்டும்.

பல சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் உலகம் ஏற்றுக்கொண்ட பல நவீன சட்டங்கள் இன்னும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உலகில் நாம் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அந்த சட்ட கட்டமைப்பில் நாமும் இடம் பெற வேண்டும்.

பொருளாதார பரிவர்த்தனைத் திட்டத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியுள்ளோம். டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவது டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான அனைத்து சட்டங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

நாட்டிற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியா அல்லது பிரதமரா என்பதல்ல இன்றைய முக்கியமான பிரச்சினை.
இலங்கையை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்பதே பிரச்சினை.

எனவே, உண்மையான நோக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்து அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அனைவரும் ஒன்றிணையுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, அனுராத ஜயரத்ன, திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version