சஜித், அனுர விவாதம் – திசை திருப்பும் முயற்சி 

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் மூவரோடு தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் மூவரையும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான பகிரங்க விவாவத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பை ஏற்காமல் விவாதத்தை திசை திருப்ப எடுக்கும் முயற்சியை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி நளின் பண்டார வன்மையாக கண்டித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி நளின் பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது பொருளாதார கொள்கை வகுப்பாளர்களையும் எதிர்கால தேசிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவிக்கு அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் முன்மொழியப்பட்டு அவர் அறிமுகப்படுத்தியவர்கள் இந்த விவாதத்தை புறக்கணித்து, அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே விவாதம் நடத்த தயார் என்று கூறுவது பிரச்சினைக்குரிய விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவினரால் எமது பொருளாதார கொள்கைகளை வகுக்கும் குழுவினரான கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன மற்றும் கலாநிதி ஹரஷ டி சில்வா ஆகியோருக்கு நேரடியாக முகம் கொடுக்க முடியாவிட்டால், அதனை பகிரங்கமாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்போது ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித்-அநுர-ரணில் ஆகியோருக்கிடையில் இந்த விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க எந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்? என்பதனை தேசிய மக்கள் சக்தியினர் வெளிப்படுத்த வேண்டும். செய்ய முடியாத வைத்தியத்துக்கு மருந்து தேடாதிருக்குமாறு கூற விரும்புகிறேன்.

அத்துடன், எந்தவித முன்நிபந்தனையும் இன்றியே அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் விவாதத்திற்கு இணங்கினார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த இரண்டு விவாதங்களையும் நடத்த மே மாதம் சரியான நேரம் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். முதலில், பொருளாதாரக் குழு உறுப்பினர்களிடையேயும், பின்னர் தலைவர்களிடையேயும் விவாதத்திற்கான திகதிகள் ஒரே நேரத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். முதலாவதாக, பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் குழுவிற்கு இடையிலான விவாதமாகவும், இரண்டாவதாக, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருடனான நாட்டின் பொருளாதாரம், கல்வி, சட்டத்தின் ஆட்சி மற்றும் வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு பரப்புகளில் நாங்கள் விவாதத்திற்கு தயார் என்றும் அறிவிக்கிறோம்.

விவாதம் நடைபெறும் இடம், அலைவரிசை அல்லது அலைவரிசைகளை இரு தரப்பினரின் பரஸ்பர உடன்பாட்டின் மூலம் தீர்மானிக்கலாம்.

இந்த விவாததுக்கு முதலில் சவால் விடுத்தது நான். இதற்கு சில வாரங்களுக்கு முன்னர், தேசிய மக்கள் சக்தி தனது பொருளாதார சபையாக சுனில் ஹதுன்னெத்தி தலைமையிலான ஒரு குழுவை அறிமுகப்படுத்தியிருந்ததே இவ்வாறு சவால் விடுப்பதற்கு காரணமாகும். எமது பொருளாதாரக் கொள்கைகள் வகுப்பாளர் குழுவும், எமது கட்சியின் எம்.பி.க்களும் ஊடக சந்திப்புகளிலும், பொதுக் கூட்டங்களிலும் தொடராக இதனை நினைவூட்டி வருகின்றனர்.

இந்த விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி அளித்த பதிலில் அவர்களுக்கே உண்டான கடந்த காலத்தை தாங்களே மறந்துவிட்ட போக்கையும் காட்டுகிறது. விவாதத்தின் சவாலின் தோற்றத்தையும் அதை யார் செய்தார்கள் என்பதையும் மறைத்து பல்வேறு கருத்துக்கள் மூலம் விவாதத்தின் தன்மையை திசைமாற்றுவது சவாலுக்கு பயந்து ஒடிப்போகும் செயலாகும்.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைக்கும் மக்கள் விடுதலை முன்னனியின் பொருளாதாரக் கொள்கைக்கும் அல்லது அனுரகுமார திஸாநாயக்கவின் பொருளாதாரக் கொள்கைக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதா? அனுரகுமார திஸாநாயக்கவின் பொருளாதார கொள்கை வகுப்பாளர்கள் சுனில் ஹதுன்நெத்தி தலைமையிலான குழுவினர்கள் தான் என்றால், இந்த விவாதத்தில் இருந்து ஓடிவிடாமல் விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு நான் மீண்டும் அவர்களுக்கு சவால் விடுக்கின்றேன்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த இரு விவாதங்கள் தொடர்பிலும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்”

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version