சொந்த சாதனையை முறையடித்த ஹைதராபாத் அணி இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு எம்.சின்னசுவாமி மைதானத்தில் இன்று(15) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஐ.பி.எல். தொடரில் அணியான்று பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
ஐ.பி.எல். தொடரில் சில தினங்களுக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 277 ஓட்டங்களை குவித்த சாதனை இன்று(15) அதே அணியால் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 102 ஓட்டங்களையும், கிலாசன் 67 ஓட்டங்களையும், அப்துல் சமாத் 37 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 34 ஓட்டங்களையும் மற்றும் மார்க்ரம் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பெங்களூரு அணி சார்பில் பந்துவீச்சில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும், ரீஸ் டொப்லி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
288 ஓட்டங்கள் எனும் இமாலய இலக்கை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
பெங்களூரு அணி சார்பில் தினேஷ் கார்த்திக் 83 ஓட்டங்களையும், அணி தலைவர் டியூ பிளசிஸ் 62 ஓட்டங்களையும் மற்றும் விராட் கோலி 42 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
ஹைதராபாத் அணி சார்பில் பந்துவீச்சில் அணி தலைவர் பட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளையும் மற்றும் நடராஜன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், ஹைதராபாத் அணி சார்பில் சதம் பெற்ற டிராவிஸ் ஹெட் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஹைதராபாத் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 4ம் இடத்திலும், தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி தரவரிசைப் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.
இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் நாளைய(16) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
குறித்த இரு அணிகளும் ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த போட்டி, கொல்கத்தாவில் நாளை(16) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.