களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் தங்கியிருந்த இரண்டு பெண்களை பல நாட்களாக காணவில்லை எனவும், வீட்டை அண்மித்த பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) தகவல் கிடைத்துள்ளது.
பின்னர், பொலிஸார் குறித்த வீட்டில் சோதனை நடத்தியிருந்த நிலையில், வீட்டினுள் இருந்து இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
65 மற்றும் 79 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.