டயானாவுக்கு பதிலாக பாராளுமன்றம் செல்லவுள்ள முஜிபுர் ரஹ்மான்? 

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு பதிலாக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இன்று(08.05) தீர்ப்பளித்திருந்தது.  

டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பாராளுமன்றத்தில்  டயானா கமகேவின் ஆசனத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. 

குறித்த வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்கப்படுபவர் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. 

இந்நிலையில், முஜிபுர் ரஹ்மானை கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக  களமிறக்குவதற்காக, அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, விரைவில் வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும், இராஜாங்க அமைச்சர் கமகே தொடர்பில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்தத் தீர்ப்பு குறித்து உயர் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்தார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version