48வது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக தேசிய மட்ட கபடி போட்டிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 27ம் திகதி தொடக்கம் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
தேசிய மட்ட கபடி போட்டி தொடர்பான முன்னோடிக் கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில் நேற்று(13.05) நடைபெற்றதாக கிளிநொச்சி மாவட்ட செயலக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், தேசிய மட்ட கபடி போட்டிக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக பங்குபற்றுபவர்களின் தங்குமிடவசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் ஏற்பாடுகள், சுகாதார வசதிக்கான ஏற்பாடுகள், உள்ளக விளையாட்டு அரங்கின் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், குறித்த நிகழ்வு சிறப்பாக நடைபெற அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர் ஹ. சத்திய ஜீவிதா, விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் தனுராஜ், விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள கபடி போட்டிக்கான இணைப்பாளர் றுபான் ராஜபக்ஷ, துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், மாவட்ட விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.