2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய(19.05) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றியீட்டியுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பஞ்சாப் அணி சார்பில் பிரப்சிம்ரன் சிங் 71 ஓட்டங்களையும், ரைலி ரூசோ 49 ஓட்டங்களையும், அதர்வா டைடே 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஹைதராபாத் அணி சார்பில் பந்துவீச்சில் நடராஜன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்று தன்னுடைய இரண்டாவது ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்றிருந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், ஐ.பி.எல் தொடரில் தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றினார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந்த் 37 ஓட்டங்களை வழங்கியிருந்ததுடன், ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.
215 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. ஹைதராபாத் அணி சார்பில் அபிஷேக் சர்மா 66 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசென் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் அணி சார்பில் பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய ஹைதராபாத் அணி ஐ.பி.எல் தொடரின் Playoffs சுற்றுக்கு முன்னதாகவே தகுதி பெற்றிருந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக தரவரிசையில் 17 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு முன்னேறியது.
இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிப்பெறும் பட்சத்தில் ஹைதராபாத் அணி Qualifier போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும்.
இதேவேளை, பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் 5 வெற்றிகளையீட்டி 10 புள்ளிகளுடன் தரவரிசையில் 9ம் இடத்தில் நிறைவு செய்துள்ளது.