உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலோன் மஸ்க்கின் பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘Tesla’ நிறுவனத்தின் கிளையொன்றை இலங்கையிலும் ஆரம்பிக்கவுள்ளதாக எலோன் மஸ்க் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எலோன் மஸ்க்கின் Starlink இணையச் சேவையை இலங்கையில் ஆரம்பிப்பது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் தற்போது மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘Tesla’ கிளையொன்றை இலங்கையிலும் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்தை விரும்பாத தரப்பினரே, எலோன் மஸ்க் போன்ற தொழில் முயற்சியாளர்களை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் என முத்திரைக் குத்துவதாகவும் அமைச்சர் பதுளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எலோன் மஸ்க் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார,
“எலோன் மஸ்க் என்பவர் பலம்வாய்ந்த தொழில் முயற்சியாளர், அவர் பல்வேறு தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார், அவரிடமிருந்து நாம் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். பல்கலைக்கழகக் கல்வி இல்லை என்றாலும், அவரது செயற்பாடுகள் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி, எலோன் மஸ்க்கை விமர்சித்ததை பார்த்தேன். அவர் கூறியது உண்மையல்ல மாறாக எலோன் மஸ்க் உலகப் பொருளாதாரத்தை மாற்றி, அதனை முன்னோக்கி கொண்டு சென்றுள்ளார்” என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.