உலகக்கிண்ணத் தொடரில் சில அணிகளுக்கு முன்னுரிமை – அமைச்சர் ஹரின் 

அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதற்கட்ட போட்டிகளின் போது இலங்கை அணி உட்பட தொடரில் பங்கேற்ற ஏனைய அணிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இலங்கையின் விளையாட்டு பணிப்பாளர் நாயகத்தினுடாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ICC) எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று(07.06) தெரிவித்தார். 

இலங்கை அணி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விசாரணை செய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அதிகாரி பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கில் தற்போது அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது பதிலளித்தார்.

அமெரிக்க விமான நிலையத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட 7 மணி நேர தாமதம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், இத்தகைய நிலை அயர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளும் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டினார். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கை உட்பட மூன்று அணிகள் விமான நிலையத்தில் தாமதத்தை எதிர்நோக்கியிருந்தது.  

அமெரிக்காவில் சில கிரிக்கெட் அணிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்கப்படுவதையும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இலங்கை அணி வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து போட்டிகள் நடைபெறும் கிரிக்கெட் மைதானத்திற்கு இடையில் காணப்படும் தூரத்தின் காரணமாக மைதானத்திற்கு பயணிப்பதற்கு அதிகளவு நேரம் செல்வதாக இலங்கை அணி வீரர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். 

இதற்கமைய, பங்களாதேஷ் அணியின் தங்குமிடத்திலிருந்தே மைதானத்திற்கு அதிகளவு தூரம் காணப்படுலதாகவும், அடுத்தப்படியாக இலங்கை உட்பட அதே ஹோட்டலில் தங்கியிருக்கும் மேலும் இரண்டு அணிகளும் குறித்த பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார். தற்பொழுது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் அமெரிக்க கிரிக்கெட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் உலகக் கிண்ணம் அமெரிக்காவில் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நியூயோர்க்கில் வழங்கப்பட்டுள்ள பொருத்தமற்ற ஆடுகளங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர், நியூயோர்க்கில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளங்கள் தற்காலிகமானவை என்றும், இதன் காரணமாக குறித்த ஆடுகளங்களை மதிப்பிட முடியாது எனவும் தெரிவித்தார். 

இலங்கை அணியின் உலகக் கிண்ணத்திற்கான தயார்ப்படுத்தல்கள் குறித்து மேற்பார்வை செய்வதற்கு தாம் அமெரிக்காவுக்கு சென்றிருந்ததாக கூறிய அமைச்சர், இலங்கை அணியின் பயிற்சி போட்டியின் போது ஆடுகளம் தரமற்றது என்பது தெளிவாக விளங்கியதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இலங்கை அணி எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க தவறியமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சினால் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் இன்று உறுதியளித்தார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version