பிரதான தமிழ் கட்சியான இலங்கைத் தமிழ் அரசு கட்சி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் முன்னிலையில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரின் இலங்கைக்கான விஜயத்தின் போது கடந்த வியாழக்கிழமை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார்.
இதன்போது, சி.வி. விக்னேஸ்வரன், செல்வராசா கஜேந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெற்கிலிருந்து களமிறக்கப்படும் எந்தவொரு பிரதான வேட்பாளரையும் ஆதரிப்பதற்கு பதிலாக பொதுத் தமிழ் வேட்பாளரை களமிறக்குவதற்கான திட்டம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளனர்.
இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த திட்டத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வட, கிழக்கில் பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைகளான சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளமை கட்சியில் பிளவினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.