அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா: இறுதி ஓவரில் அசாத்திய வெற்றி  

டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றுக்கொண்டது. சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தீர்மானமிக்க போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அன்டிகாவில் இன்று(24.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய  தென்னாப்பிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் 52 ஓட்டங்களையும், கைல் மையர்ஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பந்துவீச்சில் ஷம்ஸி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.  

136 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நிலையில் 2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 15 ஓட்டங்களை பெற்று தடுமாற்றத்தை எதிர்நோக்கியிருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி சில நிமிடங்களுக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன், 17 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அதற்கமைய DLS முறைப்படி தென்னாப்பிரிக்கா அணிக்கு 123 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

மழையின் பின்னர் அதிரடியாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியில்கை கடந்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 29 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசென் 10 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் விக்கெட்டுக்களையும், அல்சாரி ஜோசப், ஆன்ட்ரே ரசல்  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்படி, காலிறுதி சுற்றுக்கு சமமான இந்த போட்டியில் சூப்பர் 8 சுற்றின் முதலாவது குழாமில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா வெற்றியீட்டியதுடன், பங்குபற்றிய 3 போட்டிகளிலும் வெற்றியீட்டி 6 புள்ளிகளுடன் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டது. இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாப்பிரிக்கா அணியின் ஷம்ஸி தெரிவு செய்யப்பட்டார். 

சூப்பர் 8 சுற்றின் முதலாவது குழாமில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணியும் 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. இதன் காரணமாக  மேற்கிந்திய தீவுகள் அணி டி20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து தோல்வியுடன் வெளியேறியது. மேற்கிந்திய தீவுகள் அணி சூப்பர் 8 சுற்றில் பங்குபற்றிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றியீட்டியிருந்தது. 

அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா: இறுதி ஓவரில் அசாத்திய வெற்றி  

Social Share

Leave a Reply