ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் போராட்டத்தில்.. 

ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு எதிராக  இன்று(01.07) பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டிற்கு தீர்வினை வழங்குமாறு கோரி கடந்த ஜூன் மாதம் 26ம் திகதி ஆசிரியர்களும் அதிபர்களும் இணைந்து சுகயீன விடுமுறையை அறிவித்து கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் கடந்த 27ம் திகதியும்  சுகயீன விடுமுறையை அறிவித்து ஆசிரியர்களும் அதிபர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். 

ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பினை வெளியிடும் முகமாக இன்று(01.07) பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தீர்மானித்துள்ளனர். 

இதேவேளை, ஜனாதிபதிக்கு எதிர்ப்பினை தெரிவித்தும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குமாறு கோரியும் நாளை(02.07) பாடசாலை நிறைவடைந்த பின்னர் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version