ரஷ்ய குடியுரிமை பெற்ற இலங்கை இராணுவ வீரர்கள் 

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 465 இலங்கை இராணுவ வீரர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியான சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் அந்நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளதாக ரஷ்யாவிற்கு விஜயம் செய்த இலங்கை தூதுக் குழுவில் அங்கம் வகித்த ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் சமன் வீரசிங்க ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். 

ரஷ்ய சட்டங்களுக்கு அமைய இரட்டை குடியுரிமை வைத்திருக்க இயலாது என்பதால், ரஷ்ய குடியுரிமை பெற்றுள்ள இலங்கை பிரஜைகள் தற்பொழுது ரஷ்ய பிரஜைகளாக கருதப்படுகின்றனர். ஆகவே, குறித்த நபர்களிடமிருந்து தகவல்களை பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ரஷ்ய குடியுரிமை பெற்ற இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கை தொடர்பிலும் ரஷ்ய அதிகாரிகள் தகவல்களை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவ வீரர்கள் ரஷ்யாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய, மருத்துவ காரணங்களுக்காக மாத்திரமே அவர்கள் ரஷ்ய இராணுவத்திலிருந்து வெளியேற முடியும்.  

பொருளாதார காரணங்களுக்காக இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்திற்கு இணைந்துள்ளமையினால், இரு நாடுகளின் இருதரப்பு உறவின் அடிப்படையில் அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ரஷ்யாவிற்கு விஜயம் செய்த இலங்கை தூதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. 

இருப்பினும், ரஷ்ய இராணுவத்தில் சுமார் 10,000 வெளிநாட்டவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமையினால் அனைத்து நாடுகளும் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், இலங்கையின் கோரிக்கை தொடர்பிலும் ரஷ்ய அதிகாரிகள் பரிசீலனை செய்வார்கள் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, கடந்த மே மாதம் முதல் ரஷ்ய இராணுவத்திற்கு இலங்கையர்களை இணைத்து கொள்வது நிறுத்தப்பட்டுள்ளதுடன், போரில் உயிரிழந்த 17 இலங்கையர்களுக்கு தலா 13 மில்லியன் ரஷ்ய ரூபிள்(45.5 மில்லியன் இலங்கை ரூபா) இழப்பீடு வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.  

மேலும், குறித்த நபர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக குடும்ப உறுப்பினர்கள் ரஷ்யாவிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

போரில் காயமடைந்த இலங்கையர்களுக்கு 3 மில்லியன் ரஷ்ய ரூபிள்(10.5 மில்லியன் இலங்கை ரூபா) இழப்பீட்டை வழங்குவதற்கும் ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்ட சிக்கல் 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version