மன்னார் மடு திருத்தலத்தில் நிர்மாணிக்கப்படும் குறைந்த செலவிலான இடைத்தங்கல் வீடுகள் திட்டத்துக்கான மேலதிக கொடுப்பனவாக 100 மில்லியன் இலங்கை ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்த நிலையில் அதற்கான அம்சங்களை முறைமைப்படுத்தும் இராஜதந்திர ஆவணங்கள் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் W.S .சத்யானந்தா ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்துக்கான இந்திய அரசின் மொத்த நிதி ஒதுக்கீடானது தற்போது 400 மில்லியன் இலங்கை ரூபாவாக உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நிலைமைகளால் மேலெழுந்த சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் அபிவிருத்தி திட்டங்களின் நிர்மாணப்பணிகளுக்கான மூலப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள கணிசமான மாற்றங்களை கவனத்தில் கொண்டு அதற்கு ஈடுகொடுக்கும் முகமாகவும் தற்போது நடைமுறையில் உள்ள 9 நன்கொடை அடிப்படையிலான அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதனை இலக்காகக் கொண்டும் அவற்றுக்கு மேலதிக நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
மன்னார் மடு திருத்தலத்தின் குறைந்த செலவிலான இடைத்தங்கல் வீடுகள் நிர்மாண திட்டமும் குறித்த 9 திட்டங்களில் ஒன்றாகும்.
இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் 96 இடைத்தங்கல் வீடுகள் மடு திருத்தலத்தில் நிர்மாணிக்கப்படும் நிலையில் அங்கு வருகைதரும் யாத்திரிகர்கள் அவற்றைப் பயன்படுத்தமுடியும். இத்திட்டம் தற்போது நடைமுறையில் இருக்கும் நிலையில் குறித்த இடைத்தங்கல் வீடுகள் நிர்மாணப் பணிகளின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.