பிரபல அடுக்குமாடி குடியிருப்பு அசம்பாவிதம்: வெளியான புதிய தகவல்கள் 

கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள பிரபல சொகுசு அடுக்குமாடி குடியிருப்பினான அல்டெயார்(Altair) கட்டிடத்தின் 67வது மாடியிலிருந்து விழுந்த 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்த, வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட ஆண் மாணவனும், பெண் மாணவி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  

குறித்த இருவரும் கட்டிடத்தின் 67வது மாடியிலிருந்து விழுந்ததாகவும், அவர்களின் உடல்கள் 3 வது மாடியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இரு மாணவர்களும் நெருங்கிய நண்பர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவி உயரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர் என தெரியவந்துள்ளதுடன், மாணவியின் கைத்தொலைப்பேசியில் இத்தகைய புகைப்படங்கள் அதிகளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், 67வது மாடியிலிருந்து புகைப்படம் எடுப்பதற்கு முற்பட்ட போது, இருவரும் கீழே விழுந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

அல்டெயார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்றுமொரு நண்பரின் ஊடாகவே உயிரிழந்த இரு மாணவர்களும் அங்கு சென்றுள்ளனர்.

இதற்கு முன்னரும் அல்டெயார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு குறித்த இரு மாணவர்களும் பல முறை சென்றுள்ள போதும், சம்பவத்தன்று அங்கு சென்றதை பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவி வீட்டிற்கு வருவதற்கு தாமதமானதால், அவரது தந்தை உயிரிழந்த மாணவனுக்கு தொலைப்பேசியில் அழைப்பினை ஏற்படுத்தியிருந்த போது தனது நண்பி தன்னுடன் இல்லை என மாணவன் தெரிவித்துள்ளான்.

அதன்போது, இந்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படும் என மாணவியின் தந்தை கூறியமையினால், அச்சத்தின் காரணமாக இருவரும் மாடியிலிருந்து குதித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவர்களின் கைத்தொலைபேசிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில விஜேமான்ன தலைமையில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version