பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இடைக்கால தடை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சின் செயலாளரினால் கடந்த மே மாதம் 21ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் நேற்று(04.07) இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.

தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறும் உத்தரவிடக்கோரி பெருந்தோட்ட நிறுவனங்களினால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த மனு காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் நேற்று(04.07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது,  வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு, மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை நடைமுறையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சரினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது என்பதால் அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 21 நிறுவனங்களினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும், தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியாவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது எனவும் தொழில் அமைச்சரினால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறும் உத்தரவிடக்கோரி பெருந்தோட்ட நிறுவனங்களினால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை வழங்கியுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version