தாம் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் உரிமை அனைவருக்கும் – சஜித்

முஸ்லிம் மக்களின் மத உரிமைகளுக்காகவும் கலாச்சார உரிமைகளுக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும். தகனமா அல்லது அடக்கமா என்ற விவகாரத்தில் இஸ்லாமிய சமூகம் முஸ்லிம் சமூகத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினர். இனவாதத்தையும் மதவாதத்தையும் காரணம் காட்டி இந்த மக்கள் நசுக்கப்பட்டு, கலாச்சார உரிமைகள் மற்றும் மத உரிமைகள் பறிக்கப்பட்ட வேளையில் இவர்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி வீதியில் இறங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததாக அவரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சகல சமூகத்தினருக்கும் தாங்கள் விசுவாசிக்கும் மதத்தைப் பின்பற்றவும்,  சமூகத்துக்கு உரித்தான பல்வேறு கலாச்சார மற்றும் மத உரிமைகளைப் பின்பற்றவும் உரிமை உண்டு. இது அடிப்படை மற்றும் மனித உரிமையாகும். இந்த உரிமையை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 285 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மட்டக்களப்பு, காத்தன்குடி பதுரியா பாடசாலை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(04.07) இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக்  கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பாலஸ்தீன மக்களுக்கு சுதந்திரமான இறையாண்மை நிலமாகவும், மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள் தங்கள் சொந்த தேசத்தினுள் ஓர் சமூகமாக வாழும் வாய்ப்பு இன்று இல்லாமல் போய்விட்டது. தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி பலஸ்தீன மக்களுடனே இருப்போம். இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து அந்த மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனச் சிறுவர்கள், தாய்மார்கள், முதியவர்களைக் கொன்று குவிக்கும் வேலைத்திட்டத்தை நிறுத்தி, நிலத்தை பாலஸ்தீன மக்களுக்கு வழங்க வேண்டும். காஸா பகுதி பாலஸ்தீன மக்களின் உரிமையாகும். அவர்களுக்கு அந்த உரிமையை வழங்கி நிலத்தின் மீதான உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும். பலஸ்தீனர்களுக்கு அவர்களின் சொந்த நாட்டில் வாழ்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க ஆட்சியாளர்கள் பயந்தாலும், தான் அவ்வாறு அறிக்கை விட பயப்படுவதில்லை. தற்போது நடைபெற்று வரும் இந்த அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட்டு, இஸ்ரேலும் பாலஸ்தீனமும் அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் நட்புறவு கொண்ட ஆட்சியை முன்னெடுப்பதற்கு உடன்படுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரிக்கை விடுக்கிறோம். ஐநா பொதுச் சபை, ஜெனிவா தீர்மானம், கேம்ப் டேவிட் மற்றும் ஒஸ்லோ தீர்மானங்கள் கூட இதனை அங்கீகரித்துள்ளன. காஸா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான நிலத்தில் உரிமையை வழங்கி, பாலஸ்தீன நாடு உருவாகும் வரை அங்கு பலஸ்தீன மக்கள் பட்டுவரும் துயரங்களுக்கும் கண்ணீருக்கும் ஆதரவாக முன்நிற்பேன். தனது இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version