கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் கீழ் 08 பில்லியன் டொலர் நிவாரணம்

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் 03 பில்லியன் டொலர் கடனை வெட்டிவிடப்பட இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் ஊடாக நாட்டு மக்களுக்கு 08 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

20 இலட்சம் முழுமையான காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி இன்று (05.07) முற்பகல் குருநாகல் வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் 463 பேருக்கு காணி உறுதிகளை அடையாள ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிலர் சோசலிசம் பற்றி கதைத்தாலும், மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்குவதே உண்மையான சோசலிசமாகும் என்றும் தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்ட அரசாங்கம் தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, “உறுமய” காணி உறுதிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் மேலும் 20 இலட்சம் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடையாள ரீதியாக காணி உறுதிகளை வழங்கி வைத்தார்.

அரசாங்கத்தை பொறுப்பேற்கத் தலைவர்கள் எவரும் முன்வராத நிலையிலேயே தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி சரியான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு இன்று பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டை புதிய பொருளாதாரத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக குருணாகல் மாவட்டம் புதிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விரிவான அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி

“குருணாகல் மாவட்டத்தில் நாட்டிற்கு சோறு தரும் விவசாயிகள் வாழும் பகுதியாகும். ஆனால் இன்னும் அவர்களுக்கான நில உரிமை கிடைக்கவில்லை.
இன்று இந்நாட்டில் வாழும் இலட்சக்கணக்கானோர் சட்டரீதியான காணி உறுதிகள் இன்றி வாழ்கின்றனர்.
அவர்களுக்கு உரிமையை வழங்குவதற்காகவே உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம்.

மிகவும் கடினமான காலகட்டதிலேயே என்னால் ஆட்சியமைக்க நேரிட்டது. ஆட்சியைப் பொறுப்பேற்க தலைவர்கள் எவரும் அப்போது முன்வரவில்லை.
ஆனாலும் நான் ஏற்றுக்கொண்டேன். பல கட்சிகளை ஒன்றிணைத்துக்கொண்டு ஆட்சியமைத்தேன். தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க ஆரம்பித்திருக்கிறோம்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். இன்று இந்தப் பகுதி எம்.பி.க்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தமது வீடுகள் தீயிடப்பட்டதை மறந்துவிட்டு மக்களுக்கு நன்மை செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

இன்று நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்த எமக்கு 04 வருட கால அவகாசம் உள்ளது.
மேலும், சுமார் 06 வருடங்கள் மிதமான சுமையுடன் கடனை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். செலுத்த வேண்டிய வட்டியில் ஒரு தொகை வெட்டி விடப்பட்டுள்ளது.
அதனால் 05 பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு எஞ்சும்.

தற்போது தனியார் ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதன்படி சுமார் 03 பில்லியன் டொலர்கள் குறைவடையும். எனவே நாம் செலுத்த வேண்டிய பணத்தில் இருந்து மொத்தம் 08 பில்லியன் டொலர்கள் வெட்டிவிடப்படும். மேலும், தளர்வான நிபந்தனைகளின் கீழ் 02 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சீனா , இந்தியாவின் உதவித் தொகைகள் அதற்குள் உள்ளடங்காது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் 08 பில்லியன் டொலர்களை சேமித்துள்ளோம்.

நான் அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில், இந்தியா எமக்கு மூன்றரை பில்லியன் டொலர்களை இலகு கடன் அடிப்படையில் வழங்கியது. மேலும் பங்களாதேஷும் 200 மில்லியன் டொலர்களை வழங்கியது. பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், நாம் 200 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியுள்ளோம்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. வற் வரியை அதிகரிப்பது எளிதானது அல்ல. ஆனால் பொருளாதாரத்தை சீரமைக்க அதைச் செய்ய வேண்டியிருந்தது. சில தலைவர்கள் மக்களை வீதிக்கு வந்து வீடுகளை எரிக்கச் சொன்னார்கள். அரசாங்கத்தை ஆதரிக்கக் கூடாது என்றார்கள். விவசாயிகளை மீண்டும் கொழும்புக்கு வருமாறு கூறினர். விவாசாயத்துக்கு தேவையான எரிபொருள் இல்லாமல் கொழும்புக்கு வர முடியாது. மக்களுக்கு எரிபொருள் மற்றும் உரங்களை வழங்கினோம். அப்போதும் கூட விவசாயத்தில் ஈடுபடாமல் விவசாயிகளுக்கு கொழும்புக்கு வருமாறு கூறினர்.

விவசாயிகள் 2022-2023 வரையில் பெற்றுத்தந்த அறுவடையின் காரணமாகவே இந்த நாட்டின் உற்பத்தி அதிகரித்தது. அதே நேரத்தில், சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடைந்தது. இவற்றுக்கு மத்தியில் 08 பில்லியன் டொலர் நிவாரணத்தையும் பெற்றுக் கொண்டு கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான வழியை உருவாக்கியுள்ளோம். பொருளாதார வீழ்ச்சி சாதாரண மக்களையே பெருளவில் பாதிக்கிறது. ஆனால் பொருளாதார வளர்ச்சியின் இலாபத்தை ஒரு தரப்பு மாத்திரம் அனுபவிக்கிறது.

அதனாலேயே உறுமய திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச காணி உறுதிகளை வழங்கி சாதாரண மக்களுக்கும் அதன் பலன்களை பெற்றுக்கொடுக்க விருப்பினோம். பல தலைமுறைகளாக தாம் வாழ்ந்த காணியின் உரிமை இன்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தின் சாதனையாகும்.

மற்றவர்கள் சோசலிசம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் இதுதான் உண்மையான சோசலிசம். இதன் மூலம் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படுகிறது. உலகில் இரண்டு நாடுகள் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. ஜப்பான் மற்றும் தென் கொரியா. ஆனால் இரு நாடுகளிலும் குறைந்த விலைக்கு காணி வழங்கப்பட்டன. ஆனால் நாங்கள் இதை இலவசமாக வழங்குகிறோம். இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இந்நாட்டில் காணி உரிமையாளர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தினால் அதிகரித்துள்ளது.

அத்துடன் சமூர்த்தி வேலைத்திட்டத்தின் நன்மைகளை மூன்று மடங்கினால் உயர்த்துவதற்காக அஸ்வசும திட்டத்தை செயற்படுத்தினோம். வங்குரோத்து அடைந்த நாட்டிலேயே இந்த திட்டங்களை செயல்படுத்தினோம். அரசாங்க ஊழியர்களுக்கும் கஷ்டங்களுக்கு மத்தியில் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கினோம்.

எதிர்வரும் வருடங்களிலும் சம்பள அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தலாம். இத்தோடு தனியார் துறையிலும் சம்பள உயர்வு கிட்டியது. சுற்றுலா துறையின் வருமானம் அதிகரித்தது. இன்று, நாட்டில் ஒரு நவீன சுற்றுலா வணிகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது.

கடந்த பொசன் போயாவின் போது நாடு முழுவதும் ஏராளமான தன்சல்கள் நடத்தப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்களுக்கு சாப்பிட உணவு இருக்கவில்லை. இன்று உங்களது கடின உழைப்பினால் அறுவடை செய்யப்பட்ட அறுவடையில் இருந்து இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தன்சல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள் ஆச்சரியப்பட்டனர். இதுவே நமது பலமாகும். அதே சமயத்தில் நாம் நாட்டு மக்களுக்கு தேவையான சகல நிவாரணங்களையும் வழங்குகிறோம். நாடும் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இன்று இந்த குருநாகல் மாவட்டம் துரிதமாக அபிவிருத்தியடைந்து வருகிறது. கம்பஹா மற்றும் கொழும்பிற்கு அடுத்தபடியாக குருணாகல் மாவட்டத்தில் அதிகளவான மக்கள் வாழ்கின்றனர். இந்த மாகாணத்தை திட்டமிட்ட அடிப்படையில் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும். எனவே, பிங்கிரிய பிரதேசத்தில் வர்த்தக வலயமொன்றை உருவாக்குவதற்காக 1000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இரணவில சுற்றுலா வலயத்துடன் இணைக்க எதிர்பார்த்திருக்கிறோம்.

அப்போது இந்த பிங்கிரிய, மாதம்பே பகுதிகள் பாரிய முன்னேற்றம் அடையும். மேலும், குளியாபிட்டியவில் தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டமும் செயற்படுத்தப்படவுள்ளது. மேலும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் விரிவான திட்டமொன்று குருணாகல் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், தற்போது உதவித்தொகை கிடைக்கவுள்ளதால், அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய வீதி நிர்மாண பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும் இந்த மாகாணத்திற்கு புதிய பல்கலைக்கழகம் ஒன்றும் கிடைக்கும். இதனால் அடுத்த சில வருடங்களில் குருணாகல் பெரும் அபிவிருத்தி அடையும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version