லங்கா பிரீமியர் லீக் போட்டி தொடர் ஒரு நாள் இடைவெளியின் பின்னர் இன்று(05.07) தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச மைதானத்தில் கோல் மார்வல்ஸ், ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பித்தது. இந்தப் போட்டியில் யாழ் அணி 05 விக்கெட்களினால் வெற்றி பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
189 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பத்தும் நிஸ்ஸங்க 12(11) ஓட்டங்களோடு ஷகூர் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குஷல் மென்டிஸ் கடந்த போட்டிகளிலும் பார்க்க சிறப்பாக துடுப்பாடி 30(16) ஓட்டங்களை பெற்ற வேளையில் இசுரு உதானவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவிஷ்க பெர்னாண்டோ 14(11) ஓட்டங்களுடன் டுவைன் ப்ரெட்ரோரியஸ்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சம இடைவேளைகளில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஓட்டங்கள் உயர்ந்தமையினால் யாழ் அணி வெற்றியை நோக்கி செல்வது இலகுவாக இருந்தது.
ரிலி ரொசவ் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பாடி ஓட்டங்களை அதிகரித்தார். அவரோடு இணைப்பாட்டம் புரிந்த அலெக்ஸ் ரோஸ் 13(17) ஓட்டங்களுடன் மஹீஸ் தீக்ஷணவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷகூர் கானின் பந்துவீச்சில் 67(41) ஓட்டங்களை பெற்று ரிலி ரொசவ் ஆட்டமிழந்தார். அவரின் ஆட்டமிழப்போடு போட்டி இறுக்கமானது. அணியின் தலைவர் சரித் அசலங்க இறுதி வரை போராடினார். சரித் அஸலங்க ஜோடி, ஹஸ்மதுல்லா ஓமர்ஷாய் ஜோடி அதிரடி நிகழ்த்தி இறுதி வரை போராடினார்கள். இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலை காணப்பட்டது. சரித் அஸலங்க ஆட்டமிழக்காமல் 14(08) ஒட்டங்களையும், ஹஸ்மதுல்லா ஓமர்ஷாய் ஆட்டமிழக்காமல் 35(13)ஒட்டங்களையும் பெற்றனர்.
ஜப்னா கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றது.
காலி அணியின் பந்துவீச்சில் ஷகூர் கான் 4 ஓவர்கள் பந்துவீசி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார். மஹீஸ் தீக்ஷண 4 ஓவர்களில் 29 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். இசுரு உதான 4 ஓவர்களில் ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். டுவைன் ப்ரெட்ரோரியஸ் 4 ஓவர்கள் பந்துவீசி 01 விக்கெட்டை கைப்பற்றினார்.
முதலில் துடுப்பாடிய கோல் மார்வல்ஸ் அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்து தடுமாறியது. கடனர்த்த போட்டிகளில் சிறப்பாக அதிரடியாக துடுப்பாடிய இரு வீரர்களையும் வேகமாக ஆட்டமிழகச் செய்தமையினால் யாழ் அணி காலி அணி மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது. யாழ் அணியில் இந்தப் போட்டியில் சேர்க்கப்பட்ட ப்ரமோட் மதுஷான், நிரோஷன் டிக்வெல்லவின் விக்கெட்டை கைப்பற்றினார். டிக்வெல்ல 12(09) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் 23(19) ஓட்டங்களுடன் அஷ்மதுல்லா ஓமர்ஷாயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷாகன் ஆர்ச்சிகே 02(03) ஓட்டங்களுடன் அஷ்மதுல்லா ஓமர்ஷாயின் பந்துவீச்சில் வெளியேறினார்.
நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரிம் செய்பேர்ட், பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் அணியை மீட்டு எடுத்தனர். இருவரும் 69 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் பானுக ராஜபக்ஷ 28(21) ஓட்டங்களை பெற்றபோது பேபியன் அலனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிம் செய்பேர்ட்டின் அதிரடி காலி அணிக்கு கைகொடுத்தது. அவர் 104 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்தார். 98 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் துடுப்பில் பந்து பதிந்து விக்கெட் காப்பாளரிடம் சென்றிருந்தது. ஆனாலும் ஆட்டமிழப்பு கோரப்படவில்லை. ஜனித் லியனகே 06(05) ஓட்டங்களை பெற்றார்.
காலி அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.
யாழ் அணியின் பந்துவீச்சில் அஷ்மதுல்லா ஒமர்ஷாய் 4 ஓவர்களில் 33 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்ளை கைப்பற்றினார். ப்ரமோட் மதுஷான் 4 ஓவர்களில் 36 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். பேபியன் அலன் 4 ஒவகர்களில் 42 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை கைப்பற்றினார். வியாஸ்காந் இன்றும் இரண்டு ஓவர்கள் வீசினார். விக்கெட்களை கைப்பற்ற முடியவில்லை.
காலி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் காணப்படுகிறது. யாழ் அணி ஒரு வெற்றியை பெற்று மூன்றாமிடத்தில் காணப்படுகிறது.
அணி விபரம்
யாழ் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனஞ்சய டி சில்வா, பெஹ்ரன்டோப் ஆகியோர் நீக்கப்பட்டு ப்ரமோட் மதுஷான், அலெக்ஸ் ரோஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, ஷகூர் கான், மால்ஷா திருப்பதி, இசுரு உதான
ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், ரிலி ரொசோவ், பேபியன் அலன், ஹஸ்மதுல்லா ஓமர்சாய், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, அலெக்ஸ் ரோஸ், ப்ரமோட் மதுஷான்