ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று(12.07) கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சதிகளின் மூலம் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஏற்படுகின்ற அழுத்தங்களை தடுப்பது மற்றும் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது தொடர்பில் இந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக தோல்வியடையக் கூடும் என்ற அச்சத்தில் உள்ள தற்போதைய அரசாங்கம் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை பல்வேறு யுத்திகளை கையாண்டு ஒத்திவைக்க முயற்சிப்பது இரகசியமல்ல என ஐக்கிய மக்கள் சக்தி எழுதியுள்ள இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டின் இன்னுமொரு யுத்தி தற்போது வெளிவந்துள்ளதாகவும், தெளிவாக உயர்நீதிமன்றம் பொருள்கோடல் செய்துள்ள தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பு ஏற்பாடுகளை திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைக் அரசாங்கம் கொண்டு வரவுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அமைவாக மக்கள் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டிய தேவை ஏற்படும். இதனால், நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் மக்கள் கருத்துக் கணிப்பை நடத்துவதன் மூலம் பொதுமக்களின் வரிப்பணம் வீண் விரயத்திற்கு வழி வகுத்தல் என்பன இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, ஜனாதிபதித் தேர்தலை சாத்தியமான முதல் நாளில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும், தேர்தலை சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் நடத்துவதற்கு தங்களது அதிகபட்ச சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.