ஆசியக் கிண்ணம்: தொடரும் இந்தியாவின் ஆதிக்கம் 

மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கின்றது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக இன்று(21.07) நடைபெற்ற போட்டியில் இந்தியா அபார வெற்றியீட்டியது. 

தம்புள்ளையில் இன்று(21.07) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்தியா சார்பில் அணித் தலைவி ஹர்மன்பிரீத் கவுர்(Harmanpreet Kaur) 66(47) ஓட்டங்களையும், ரிச்சா கோஷ்(Richa Ghosh) ஆட்டமிழக்காமல் 64(47) ஓட்டங்களையும், ஷஃபாலி வர்மா(Shafali Verma) 37(18) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

ஐக்கிய அரபு இராச்சியம் சார்பில் பந்துவீச்சில் கவிஷா(Kavisha) 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

202 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. ஐக்கிய அரபு இராச்சியம் சார்பில் கவிஷா(Kavisha) 40(32) ஓட்டங்களையும், ஈஷா ரோஹித் ஓசா(Esha Rohit Oza) 38(36) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் தீப்தி சர்மா(Deepti Sharma) 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன்படி, இந்த போட்டியில் குழு ‘ஏ’ உள்ள இந்திய மகளிர் அணி 78 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியதுடன், தரவரிசையில் 4 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகியாக இந்திய அணியின் ரிச்சா கோஷ்(Richa Ghosh) தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version