ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவுடன் இன்று காலை (11.08) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக,பிரவேசித்த பாராளுமன்ற உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.
இவர் கம்பஹா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நன்மதிப்பு மிக்க அரசியல்வாதியான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் மனைவியாவார்.
பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ள இவர் கடந்த அரசாங்கத்தின் கீழ், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.
பெர்னாண்டோபுள்ளே முன்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.