தமிழீழ விடுதலை இயக்கத்திற்குள் பிளவு?

தமிழீழ விடுதலை இயக்கத்திற்குள் பிளவு?

கட்சியின் முடிவுக்கு மாறாக, தாம் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போவதில்லை எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின்(டெலோ) பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (28.08) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த வினோ நோகராதலிங்கம்,

“முன்னர் நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எனது கட்சி ஒரு முடிவு எடுத்திருக்கலாம். என்னை பொறுத்தவரை எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. பொது வேட்பாளருக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யப்போவதில்லை.

கட்சி எடுத்த முடிவு சரியோ தவறோ என்பதற்கு அப்பால் தனிப்பட்ட ரிதீயிலே இந்த முடிவோடு நான் இணங்கவில்லை. மக்களால் விரும்பப்படுகின்ற மக்கள் தேர்ந்தெடுத்த முடிவாக இதனை நான் கருதவில்லை.

தேர்தல் முடிவுகளிற்குப் பின்னர் இந்த பொதுக்கட்டமைப்பில் உள்ளவர்கள் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பை இந்த தேர்தல் நிச்சயமாகக் கொடுக்கும்.

குறிப்பாகத் தேர்தலில் நிற்கும் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் மக்கள் மனங்களிலே இருக்கின்றது. மக்கள் தீர்க்கமான சரியான முடிவை எடுப்பார்கள். பெரும்பான்மையான மக்கள் எடுத்த முடிவிற்கு ஆதரவாக நானும் செயற்படுவேன்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் பலதடவைகளுக்கு மேல் சந்தித்திருக்கின்றேன். வன்னி மாவட்டத்தினுடைய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கங்கள் சம்பந்தமாக அவருடன் கலந்துரையாடியுள்ளேன்” என்றார்.

இதேவேளை, வினோ நோகராதலிங்கம் நிலைப்பாடு, அவருடைய தனிப்பட்ட விருப்பம் எனவும் அதனைக் கட்சியின் நிலைப்பாடாக ஏற்றுக்கொள்ள இயலாது எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ப.அரியநேத்திரனை ஆதரித்து வவுனியா நகரில் நேற்று(28.08 )துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் நடந்த இந்த விநியோக பணியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version