இளைஞர்களுக்கான ஒரு மில்லியன் புதிய தொழில் முயற்சிகள் – சஜித்

இளைஞர்களுக்கான ஒரு மில்லியன் புதிய தொழில் முயற்சிகள் - சஜித்

விவசாயிகளை இலக்காகக் கொண்டு நீர்ப்பாசன கட்டமைப்பை மேம்படுத்துவதோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்,
கொரோனா தொற்று நாட்டின் வங்கரோத்து நிலைமை என்பனவற்றினால் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்காக வேலைத்திட்டங்கள்
முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 25 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி
சஜித் பிரேமதாச தலைமையில் தங்கல்ல நகரில் நேற்று(28.08) மாலை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தரமான 50 கிலோ கிராம் உர மூடையொன்றை 5000 ரூபாவிற்கு வழங்குவதோடு, கருப்புச்சந்தை வர்த்தகத்தை
நிறுத்தி கமநல சேவை மத்திய நிலையங்களின் ஊடாக இரசாயன மருந்துகள் மற்றும் திரவ உரங்களையும் நியாயமான விலைக்கு வழங்குவோம்.
QR CODE முறையூடாக மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும்,
பாடசாலை போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும், சக்தி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும்
நிவாரண அடிப்படையில் எரிபொருள் வழங்குவோம் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நெல்லுக்கான நிர்ணய விலையையும் பெற்றுத் தருவோம்.

அரசாங்கத்தினால் அவர்களின் செல்வந்த நண்பர்களின் கோடிக்கணக்கான கடன் தொகையை இரத்து செய்ய முடிந்த போதும்,
விவசாயிகளின் கடன்களை இரத்துச் செய்ய முடியாமல் போயிருக்கிறது.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இந்த கடன்களை
இரத்து செய்வோம்.

இந்த விடயங்களைச் செய்ய முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்பினாலும், தனது 20 வருட சேவை காலத்தில் தான்
எவ்வாறு சேவை செய்கின்றேன் என்பது குறித்து மக்கள் அறிந்திருக்கின்றார்கள்.
ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி 200 ஆடை தொழிற்சாலைகளை நிறுவிய போதும் அதனைத் தடுத்தவர்கள் இருந்தார்கள்
ஆனாலும் அவை முறையாக இயங்கின.

🟩 சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜனாதிபதி செயலணி.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவி, கடல் வளங்களையும், வன வளங்களையும்
மையமாகக் கொண்டு சுற்றுலாத்துறை செயற்பாட்டை முன்னெடுப்போம்.

🟩 இளைஞர்களுக்கான ஒரு மில்லியன் புதிய தொழில் முயற்சிகள்.

ஒரு மில்லியன் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்கி, அவர்களுக்கான மூலதன அணுகலை வழங்குவோம்.
புதிய தொழில் முயற்சியின் ஊடாக யாருக்கும் கைகட்டி வாழாத சூழலை உருவாக்கு நடவடிக்கை எடுப்போம்.

🟩 வறுமையைப் போக்கும் புதிய வழிகள்.

வறுமையை போக்குவதற்கான புதிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதோடு ஜனசவிய, சமர்த்தி, கெமி திரிய,
அஸ்வெசும போன்றவற்றில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கிய புதிய முறையொன்றின் ஊடாக
வறுமையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து நிவாரணங்களை வழங்கும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்,
வறுமையில் இருந்து மீண்டு சுயமாக எழுந்து நிற்க முடியுமான யுகத்தை உருவாக்குவோம்.

அத்தோடு ஐந்து பிரிவுகளுக்குள் உள்ளடக்கியதாக 24 மாதங்களுக்கு தலா 20000 ரூபா வீதம் வழங்கி ஏற்றுமதி,
சேமிப்பு, நுகர்வு, முதலீடு உற்பத்தி ஆகிய துறைகளின் ஊடாக வறுமையில் உள்ள குடும்பங்களை மேம்படுத்த நடவடிக்கை
எடுப்போம்.

🟩 விரிவான கல்வி மற்றும் சுகாதார சேவைகள்.

கல்வித்துறையை மேம்படுத்த சகல வசதிகளையும் கொண்ட பாடசாலை கட்டமைப்பை ஏற்படுத்தி steam education
முறையை பிரபல்யப்படுத்தி நவீன தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு இலவசக் கல்வியை அனைத்து பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்துவோம்.
வைத்தியசாலைகளுக்கும் சகல வசதிகளையும் வழங்குவதோடு, அரசாங்கத்தின் நிதி உதவிகளை வழங்குவதோடு,
சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக் கொள்ளும் முறையை நாம் அறிந்திருக்கிறோம்.
பிரபஞ்சம் மூச்சு போன்ற வேலைத் திட்டங்கள் அதற்கான சிறந்த உதாரணமாகும்.

இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முடியுமான வளங்களை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் உண்டு.
நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தொழில்துறையை உருவாக்குவதோடு இலஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து,
அனைத்து அரச கொடுக்கல் வாங்கல்களையும் டிஜிட்டல் மயப்படுத்தி வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

🟩 அரசியல் பழிவாங்கல்களுக்கு நியாயம் கிடைக்கப்பெற செய்வோம்.

2019 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான அனைவருக்கும் நியாயத்தை பெற்றுக் கொடுப்போம்
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version