ஐக்கிய மக்கள் சக்தி இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தி வைத்தியசாலைக் கட்டமைப்பை பலப்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 46 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் காலி பத்தேகம நகரில் நேற்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இங்கு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தற்பொழுது வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக இதய சத்திர சிகிச்சைகளுக்காக பல வருடங்களாக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றார்கள். இலவச சுகாதார சேவை இருக்கின்ற போது அதற்கு சரியான தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும்.
நாட்டில் இந்த அளவு சிக்கல்கள் இருக்கின்ற போது ரணிலும் அநுரவும் ஒப்பந்தம் செய்து கொண்டு அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றனர். இது நீண்ட காலமாக வந்திருக்கின்ற தொடர்பாகும். நாட்டில் ஒரு மாற்றத்தை இதன் ஊடாக எதிர்பார்க்க முடியாது. ரணிலுக்கும் அநுரவிற்கும் இதில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. 220 இலட்சம் மக்களுக்காக இவர்கள் டீல் செய்துகொள்ளவில்லை. அவர்களுக்காகவே அவர்கள் டீல் செய்து கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஊழலை ஒழிப்போம் என்று கூறிய அனுர நல்லாட்சி காலத்தில் ஊழல் ஒழிப்பு குழுவின் தலைவராக இருந்த போது அவர் செய்தது எதுவும் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு திருடர்களை பிடித்த ஒரே குழு ஐக்கிய மக்கள் சக்தியாகும். ராஜபக்சக்கள் நாட்டை வங்குரோத்தடையச் செய்தார்கள் என்ற தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணி எடுத்த சட்ட ரீதியிலான நடவடிக்கையாலேயே நடந்தது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.