கட்சி அலுவலகத்தில் தாக்கப்பட்ட ஊழியர் – நகர சபைக்கு முன்பாக போராட்டம்

கட்சி அலுவலகத்தில் தாக்கப்பட்ட ஊழியர் - நகர சபைக்கு முன்பாக போராட்டம்

மன்னார் நகர சபையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கடந்த 11ம் திகதி நிலுவையிலிருந்த ஆதன வரியை அறவிடச் சென்றபோது தாக்கப்பட்டமையைக் கண்டித்து மன்னார் நகரசபைக்கு முன்பாக இன்று(13.09) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆதன வரியை அறவிடுவதற்கு இரு பெண் ஊழியர்கள் ரெலோ கட்சி அலுவலகத்துக்குச் சென்ற போது அங்கிருந்த கட்சி உறுப்பினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பெண் ஊழியர் கழுத்தைப் பிடித்துத் தள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பெண் ஊழியர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நகரசபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில், “பெண்கள் மீது வன்முறை காட்டும் கோழைகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்”,
“வசந்தனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமா ரெலோ அமைப்பின் தலைமைத்துவம்?”, “பணபலமிருந்தால் அரச அலுவலரை அடிப்பது சாதாரண விடயமா?” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

போராட்ட களத்திற்கு வருகைதந்த உதவித் தேர்தல் ஆணையாளர் வே.சிவராஜா, தேர்தல் காலத்தில் இவ்வாறு போராட்டங்கள் முன்னெடுக்கக் கூடாது என அறிவுறுத்திய நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.

மன்னார் நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த போராட்டத்தில், வருமான வரி உத்தியோகத்தர்கள், மன்னார் மாதர் ஒன்றியம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version