லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. லெபனானின் தற்போதைய போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து, லெபனானுக்கு வந்த பின்னர் அதே பதிவைப் புதுப்பிக்காமல் நீண்ட காலமாக பணியில் இருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு இந்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நேற்று(08.10) முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 08ம் திகதி வரை குறித்த சலுகை காலம் அமுலில் இருக்கும்.
இந்த காலப்பகுதியில் தூதரகத்திற்கு வந்து பதிவுகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வரும் போது பின்வரும் ஆவணங்களைத் தூதரக அலுவலகத்திற்குக் கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
- செல்லுபடியாகும் விசா மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (இந்த ஆவணங்கள் கட்டாயமாகும்.)
- தற்போதைய வேலை ஒப்பந்தம் (Current Employment Contract) அல்லது தற்போதைய பணியிடத்துடன் தொடர்புடைய வேலை வழங்குநரால் வழங்கப்பட்ட வேலை வாய்ப்பு கடிதம் (Job Offer Letter)
- தற்போதைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம் (Current Employment Contract) அல்லது வேலை வழங்குநரால் வழங்கப்பட்ட வேலை வாய்ப்பு கடிதம் (Job Offer Letter) இல்லாதவர்கள், தூதரகத்தால் வழங்கப்பட்ட சுய-விபர படிவத்தை (Self-Declaration) பூர்த்தி செய்து, அங்குப் பதிவு செய்யலாம்.
இந்த பதிவு செயல்முறைக்கு 62 டொலர்கள் (USD 62/-) அரசாங்கக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
லெபனானில் நிலவிவரும் யுத்த சூழ்நிலையில் சலுகை காலத்தைச் சிறந்த வாய்ப்பாகக் கொண்டு, பணியகத்தில் பதிவு செய்து, பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிமையுள்ள நலன்புரி மற்றும் காப்பீட்டுச் சலுகைகளைப் பெற்றுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.