இந்திய அரசியின் 2025 ஆம் ஆண்டின் வெளிநாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இந்திய ஊடகம் “த இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி 5,483 கோடி ரூபா வெளிநாட்டு உதவிகளுக்கான தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகையில் 64% தொகையை இந்தியாவின் உடனடி அடுத்த நாட்டுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டிட்டின் படி 300 கோடி இந்திய ரூபாய் இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 245 கோடி இலங்கைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்று சனிக்கிழமை 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிதியமைச்சர் என்ற ரீதியில் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை முன்வைத்தார்.
இதில் இந்திய வௌியுறவு அமைச்சுக்காக 20,516 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக 5,483 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, வீதிகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதால், அதற்கான ஒதுக்கீடு 245 கோடியிலிருந்து 300 கோடி இந்திய ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.