தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – பிரதமர்

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரச்சாரம் செய்துகொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதை கண்டிப்பதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு அச்சத்தையும் ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லையெனவும் பிரதமர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அட்டமஸ்தான பீடாதிபதியை வணங்கி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிலையில் அனுராதபுரம் சன்னிபாத மண்டப வளாகத்தில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

எதிர்வரும் 9 மாதங்களுக்கென இந்த வரவு செலவு திட்டத்தில் 619 பில்லியன் ரூபா கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒதுக்கப்பட்ட அதிக நிதி இதுவாகும். 2026ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி மறுசீரமைப்புகளுக்கான அடித்தளத்தை இடுவதற்கு இந்த நிதியை நாம் செலவிடவுள்ளோம்.

அதேபோன்று, ஜனாதிபதியின் உரையில் தெரிவித்ததற்கமைய, இந்த நாட்டு மாணவ மாணவிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களுக்கென புலமைப்பரிசில்களை வழங்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பாடசாலை கட்டமைப்புக்குள் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக அடிப்படை வசதிகள், தங்குமிட வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அனைத்து பாடசாலைகளும் ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும் என்பதே எமது நம்பிக்கையாகும்.

பிரபல்யமான பாடசாலை, பிரபல்யமற்ற பாடசாலை, நல்ல பாடசாலை, நல்லமில்லாத பாடசாலை என இருக்க முடியாது. சமமான பண்புகளைக் கொண்ட நியாயமான கல்வி சந்தர்ப்பங்கள் அனைத்து பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது. கற்றல் சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்கும் நாம் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

பாடசாலைகளில் நிறைவு செய்யப்படாத பல வேலைத்திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது குறித்து தலையிடவும் எதிர்பார்த்துள்ளோம். அதேபோன்று வரவு செலவு திட்டத்தில் மஹபொல 5000 ரூபா கொடுப்பனவை 7500 ரூபாவாக அதிகரித்துள்ளோம்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்களை வழங்கும் மாணவர்களின் எண்ணிக்கையினையும் அதிகரித்துள்ளோம். இவ்வாறு பிள்ளைகளை பாடசாலை கல்வி செயன்முறைக்குள் தக்கவைத்துக்கொள்வதற்கென எம்மால் இயலுமான அனைத்தையும் நாம் மேற்கொள்வோம்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவிற்கு சபையில் அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர்கள் பிரதமரிடம் வினவினர், தான் பாராளுமன்றத்தில் இல்லாத போதிலும் அது தொடர்பில் இடம்பெற்ற தவறினை சரி செய்வதற்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வந்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். தவறு ஒன்று இடம்பெற்றால் அதனை உடனடியாக சரி செய்வதற்கு தற்போதைய அரசு செயற்படுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்குள் இடம்பெறும் வாத பிரதிவாதங்களின் தரம் மேம்பட்டுள்ளது. முன்னர் பாடசாலை மாணவர்களை கெலரியிலிருந்து நீக்குவதற்கு எமக்கு நேரிட்டது. இதனை பிள்ளைகள் கற்கும் இடமாக நாம் மாற்றியுள்ளோம். தவறு இடம்பெற்றாலும் அதனை மறைத்துக்கொண்டு இருப்பதற்கு நாம் ஒருபோதும் முயற்சிக்க மாட்டோம்.

எதிர்க்கட்சியிலுள்ள பலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இப்பொழுது அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் எதிர்க்கட்சிகள் இன்று தவறான பிரச்சாரத்தை பரப்புகின்றன. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் எவ்வித சந்தேகமும் ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

தேசிய பாதுகாப்பு என்ற போலி பிரச்சாரத்தை பரப்புவதால் நடந்தவை எமக்கு ஒருபோதும் மறக்காது. நாட்டில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் அரசியல் இலாபம் தேடுவதற்கு எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை தாம் கண்டிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version