இந்தியாவுடனான தரைவழி இணைப்புக்கு இலங்கை தயாராக இல்லை

இந்திய, இலங்கை தரைவழி இணைப்பு திட்டத்தை பரிசீலிக்க இலங்கை மறுத்துவிட்டதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில கருத்துக்களை தெரிவித்த போதிலும், தரைவழி இணைப்பு திட்டத்தை பரிசீலிக்க இலங்கை மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

2004 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தலைமன்னாருடன் இராமேஸ்வரத்தை இணைக்கும் பாலம் கட்டும் யோசனையை முன்வைத்திருந்தார்.

இது இலங்கையையும் இந்தியாவின் தென் மாநிலங்களையும் உள்ளடக்கியது மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

எனினும் சிங்கள – பௌத்தர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் குழுக்களும், சில கட்சிகளும் இலங்கைக்கு எந்தப் பயனும் தராது என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புது டில்லிக்கு விஜயம் மேற்கொண்ட போதிலும் இந்தத் திட்டத்தைத் தொடர மறுத்துவிட்டார் என பல ஆதாரங்களில் இருந்து டெய்லி மிரர் அறிந்துகொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் விளைவாக, இந்தியப் பிரதமரின் வருகையின் போது இந்த விடயம் இலங்கை நிகழ்ச்சி நிரலில் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது, ​​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி இணைப்பு குறித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply