மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்- செல்வம் எம் பி!

மக்களுடைய காணிகள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்க போவதில்லை என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று (14.06) சனிக்கிழமை மாலை மன்னாரில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி அனுரகுமார அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முப்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாகத் தெரிவித்திருந்தார். எனினும் பல இடங்களில் அது நடைபெறவில்லை.

மன்னார் பள்ளி முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாங்கள் பாராளுமன்றத்தில் பேசியிருந்தோம்.
ஜனாதிபதிக்கும் இது தொடர்பாகக் கடிதங்கள் அனுப்பி இருந்தோம் .

ஆனால் தற்போது இந்த கடற்படை முகாம் அமைந்திருக்கும் காணிகளை வருகின்ற 20 ம் திகதி அளவீடு செய்யப் போவதாக அறிவித்தல் ஒட்டப்பட்டு இருக்கிறது.

எனவே நாங்கள் இதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. மக்கள் இதற்காக நிச்சயம் போராடுவார்கள்.இந்த நிலைமையை மாற்றுவதற்காக இது சம்பந்தமாக நாங்கள் ஜனாதிபதிக்கும் தெரிவிக்க இருக்கிறோம். அதேபோன்று அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் நாங்கள் இது சம்பந்தமாக முறைப்பாடு செய்ய இருக்கின்றோம்.

ஆகவே இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் அத்தோடு பள்ளி முனை மக்களின் காணிக்கைகளை அவர்களிடமே பகிர்ந்தளிக்க வேண்டும். கடற்படை அதை அபகரிக்கின்ற செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் மக்கள் போராட்டம் வெடிக்கும் வாய்ப்பினை உருவாக்க வேண்டாம் என்பது எங்களுடைய கோரிக்கையாக உள்ளது.

எனவே ஜனாதிபதியிடம் இந்த செயற்பாட்டை
நிறுத்துமாறு வலியுறுத்தி நாடாளுமன்றத்திலும் நாங்கள் பேச இருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்

ரோகினி நிசாந்தன் – மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version