திருகோணமலை மாவட்டத்தில் இன்று (21/12) 24 மணித்தியால தொழிற்சங்க போராட்டத்தினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை செயலாளர் இராணுவ மனோபாவத்துடன் செயல்படுவதாகவும் இன்னும் பிற காரணங்களை முன்வைத்தும் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இத்தொழிற்சங்க நடவடிக்கைக்கு சுகாதார அமைச்சு அக்கறை காட்டவில்லை என்றால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மத்திய குழுவின் அவசரக் கூட்டத்தை இன்று கூட்டி குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மாத்திரம் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையினை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தொழிற்சங்க நடவடிக்கையினை தொடர்ச்சியாக முன்னெடுப்பதா? இல்லையா? என்ற தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் மேலும் இவ் சுகாதாரத்துறை செயலாளரின் இந்த செயற்றப்பாடு குறித்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு ஒன்றும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் தூர இடங்களில் இருந்து வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர நோயாளி பராமரிப்பு சேவைகள் மற்றும் கிளினிக் சேவைகள் எந்தவித இடையூறும் இன்றி வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை சட்டிக்காட்டத்தக்கது.
(திருகோணமலை நிருபர்)
