கறுப்பு ஜூலையை முன்னிட்டு 5 ஆம் திகதி அல்லது 6 ஆம் திகதி தீவிர வாத தாக்குதல் நடாத்தப்படலாம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் பயப்பட தேவையில்லை என பாதுக்காப்பு அமைச்சு மக்களுக்கு அறிவித்துள்ளது.
புலனாய்வு துறையினரது தகவலை அடிப்படையாக வைத்து பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்கே ஊடக சந்திப்பில் இந்த விடயங்களையும், கடிதத்தையம் வெளிப்படுத்தியிருந்தார்.
தெற்கில் அல்லது வடக்கில் இவ்வாறன தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அனுரகுமார தெரிவித்துள்ளார். அத்தோடு இவற்றுக்கு என்ன நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கேள்வியினை எழுப்பிய அதேவேளை, நடைபெறும் போராட்டங்களை குழப்ப இவ்வாறான தகவல் வெளியிடப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையிலேயே புலனாய்வு திணைக்களம் இந்த விடயங்களை தெரிவித்துள்ளது என பாதுகாப்பது அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எந்தவித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இலையெனவும் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் முகமாகவும் இவ்வாறான தகவல்கள் பகிரப்பட்டிருப்பப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்பு அதி உயர் முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் மேலும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் எந்தவித பயமுமின்றி தங்களது வழமையான வேலைகளில், பணிகளில் ஈடுபடலாம் எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் கூறியுள்ளது.