கடந்த வியாழக்கிழமை(15.12), கொழும்பில் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்ட ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் கொலை தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் துரித கதியில் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(18.12) டினேஷ் சாப்டரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. நேற்று(19.12) இந்த கொலை தொடர்பிலனா விசாரணைகளின் அடிப்படையிலான தகவல்களை பொலிஸ் வெளியிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட டினேஷ், முன்னாள் இலங்கை கிரிக்கெட் ஊடக முகாமையாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரைன் தோமஸை சந்திப்பதற்கு செல்வதாக கூறி பிற்பகல் 2.06 இற்கு வீட்டிலிருந்து கிளம்பி நேரடியாக பொரளை பொது மயானத்திற்கு 30 நிமிடங்களில் சென்றுள்ளார். கண்காணிப்பு கமராக்களை சோதனையிட்டதன் மூலம் இதனை உறுதி செய்துள்ள பொலிசார் இடைவழியில் எவரும் அவரின் காரில் ஏறவில்லை என்பதனை உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில் “உங்களை சந்திக்க வேண்டும்” என 2.30 இற்கு டினேஷ், பிரைன் தோமஸுக்கு குறும் செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் “தன்னால் சந்திக்க வரமுடியாது. சந்திக்க வேண்டிய தேவைகள் இல்லை” என பிரைன் தோமஸ் பதில் அனுப்பியுள்ளார். அத்தோடு பிரைன் தோமஸ் வீட்டை விட்டு அந்த நேரத்தில் வெளியாகவில்லை என கண்காணிப்பு கமராக்கள் மூலம் உறுதி செய்யபப்ட்டுள்ளது. இரு தொலைபேசிகளும், கணினி பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த குறும் செய்தியினை அடிப்படையாக வைத்தே குற்றம் நடைபெற்றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. கணனி, விஞ்ஞான, தொழில்நுட்ப உதவிகளுடன் இந்த விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகும், விரைவில் குற்றவாளியை கைது செய்ய முடியுமெனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிகால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த கொலை தொடர்பில் டினேஷ் சாப்டரின் குடும்ப அங்கத்தவர்கள், அலுவலக ஊழியர்கள், மற்றும் அவரது
வியாபார பங்காளர் உள்ளடங்களா பலரிடம் விசாரணைகள் நடைபெற்றுள்ளன. அவரது வியாபார பங்காளரே திருமதி டினேஷின் வேண்டுகோளுக்கிணங்க அவரை தேடி சென்று மீட்டுள்ளார். திருமதி டினேஷ் மற்றும் டினேஷின் வியாபார பங்காளர் ஆகியோருக்கு டினேஷின் இருப்பிடங்களை கண்காணிக்கும் GPS தொழில்நுட்ப வசதி வழங்கப்பட்டிருந்துள்ளது. அத்தோடு பிரைன் தோமஸை சந்திப்பதற்காகவே செல்வதாக தன்னிடம் கூறியதாகவும் அந்த வியாபர பங்காளர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
டினேஷ் வீட்டிலிருந்து கிளம்பி சென்ற வேளையில் இனம் தெரியாத கார் ஒன்று அவரின் காரை பின் தொடர்ந்துள்ளது. அந்த கார் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரைன் தோமஸ் இலங்கையின் பிரபல ஆடை நிறுவனம் ஒன்றுக்காக பணம் முதலீடு செய்வதற்கான முகவராக செயற்பட்டு வந்ததாகவும், அதற்கான பண முதலீடு செய்வதற்காகவே டினேஷ் சாப்டர் 143 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், அந்த பணத்தை மீள வழங்காத நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரைன் தோமஸ் மீது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பிரைன் தோமஸ் கைது செய்யப்பட்டு 10 மாதங்களின் பின்னர் நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பிரைன் தோமஸ் இந்த வேலையினை பலரிடமும் செய்து வந்துள்ளார்.
இந்த வியாபாரம் தொடர்பிலான நிகழ்ச்சி ஒன்றினை ஊடகவியலார் சமுத்தித, டினேஷ் இறந்த தினத்தில் தனது யூடியுப் தளத்தில் செய்திருந்த நிலையில் அவரிடம் நேற்று பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டதாகவும், வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கொலை தொடர்பிலான செய்திகள் கீழுள்ளன