முல்லைத்தீவு மாவட்டத்தின், கரைதுரைப்பற்று பிரதேச சபைக்கான வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கரைதுரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் பதில் உபசெயலாளர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம், உட்பட மேலும் இருவர், தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்த ஆட்சேபனையினை தொடர்ந்து S.துரைராஜா, ஷிரான் குணரட்ன, ஜனக டி சில்வா ஆகிய உயர் நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக முடிவு செய்தனர்.
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A சுமந்திரன் மற்றும் விரான் குரே ஆகியோர் முன்னிலையான அதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக தர்ஷனா வெறதுவகே, தர்ஷினி கலுபாகன, உஷானி அத்தப்பத்து ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
